'ஆன்லைன்' விளையாட்டில் ஈடுபடுவோர் குறித்து 'சர்வே' 'சர்வே' எடுக்கிறது ஆணையம்
'ஆன்லைன்' விளையாட்டில் ஈடுபடுவோர் குறித்து 'சர்வே' 'சர்வே' எடுக்கிறது ஆணையம்
ADDED : மே 18, 2025 01:06 AM

சென்னை: 'ஆன்லைன்' விளையாட்டு தொடர்பான விதிமுறைகள் எத்தனை பேருக்கு தெரிந்துள்ளன; எத்தனை பேர் ஆன்லைன் விளையாட்டுடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம், 'சர்வே' எடுக்கிறது.
தமிழகத்தில், 18 வயதுக்கும் குறைவான சிறுவர் - சிறுமியர் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தி, விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வாயிலாக விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ள, அடையாள ஆவணங்கள் சரிபார்ப்பு கட்டாயம் என்பது உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட ஒழுங்கு விதிமுறைகளை, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் வகுத்துள்ளது.
இது மக்களுக்கு தெரிந்துள்ளதா; ஒருமுறையாவது பணம் செலுத்தி, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனரா அல்லது இதுபோன்ற விளையாட்டில் ஈடுபடும் நபர்களிடம் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து, 'க்யூ.ஆர்., கோடு' வாயிலாக அந்த ஆணையம் சர்வே எடுத்து வருகிறது.
இதுகுறித்து ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த சர்வேயில், 18 வயதுக்கும் குறைவானவர்கள் பங்கேற்க முடியாது. தமிழகத்தில் எத்தனை பேர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுகின்றனர்; அந்த விளையாட்டிற்கான ஒழுங்கு முறை விதிகளை தெரிந்துள்ளனரா என்பது குறித்து அறிய, இந்த சர்வே நடத்தப்படுகிறது' என்றனர்.