தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பு விவகாரம் இழப்பீடு செலுத்தாமல் மாநகராட்சி 'டிமிக்கி'
தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பு விவகாரம் இழப்பீடு செலுத்தாமல் மாநகராட்சி 'டிமிக்கி'
ADDED : செப் 08, 2025 03:31 AM

திருநெல்வேலி: சுத்திக்கரிக்கப்படாத கழிவுநீரை தாமிரபரணி ஆற்றில் கலக்க விட்டதால், 28.73 கோடி ரூபாய் இழப்பீடு விதிக்க, திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்திற்கு, 2021 ஜூலை 6ல், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உத்தரவிட்டார்.
ஆனால் நான்காண்டுகள் கடந்தும் இத்தொகை மாநகராட்சியிடமிருந்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வசூலிக்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகமும் டிமிக்கி கொடுத்து வருகிறது.
இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொதுமக்கள் சுகாதாரமும் கேள்விக் குறியாகியுள்ளன.
தாமிரபரணி நதி திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான பிரதான ஆதாரமாக உள்ளது.
தொடர்ந்து கழிவுநீர் கலப்பதால் மக்களின் உடல் நலம், பசுமை மற் றும் ஆற்றாங்கரையோர உயிரியல் சூழல் பாதிக்கப்படுவதாக சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், எஸ்.பி.முத்துராமன் தெரிவித்து உள்ளார். அத்துடன், 28.73 கோடி ரூபாயை உடனடியாக மாநகராட்சியிடமிருந்து வசூலிக்கவும், வசூலிக்கப்பட்ட தொகையை தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தவே பயன்படுத்தவும் வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உத்தரவிட்டு, நான்காண்டுகள் ஆன பிறகும், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியின் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் தான் கலக்கிறது.