UPDATED : ஜூன் 21, 2024 04:30 PM
ADDED : ஜூன் 20, 2024 11:16 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 168 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதால், மரண எண்ணிக்கை வெகுவாக உயரும் என கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கு, கண் பார்வை குறைவு மற்றும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில், 143 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், 17 பேர் நேற்று முன்தினம் இறந்தனர்; நேற்று 23 பேர் இறந்தனர்.
மரண ஓலம்
இன்று(ஜூன் 21) காலை நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், 27 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் உட்பட மொத்தம் 52 பேர் இறந்தனர்.
இவர்களில் நான்கு பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை. கள்ளக்குறிச்சியில் 56 பேர், புதுச்சேரியில் 16 பேர், சேலத்தில் 35 பேர், விழுப்புரத்தில் இரண்டு பேர் என, 109 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்களின் வீடுகளுக்கு கலெக்டர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ், தமிழக சுகாதார திட்ட இயக்குனர் கோவிந்தராவ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஒவ்வொன்றாக ஆம்புலன்சில் அவர்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டன. பெரும்பாலான தெருக்களில் இறந்தவர்களின் உடல்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
பழைய மாரியம்மன் கோவில் தெருவில் ஏழெட்டு உடல்கள் அடுத்தடுத்த வீடுகளுக்கு முன் வைக்கப்பட்டது, பார்ப்போரை கண்கலங்க வைத்தன. உறவினர்கள் படையெடுப்பால் கருணாபுரம் பகுதி முழுதும் மரண ஓலம் ஓயாமல் கேட்டது.
இறந்த 40 பேரில், 11 பேரின் உடல்கள் கருணாபுரம் சுடுகாட்டிலும், இருவரின் உடல்கள் கள்ளக்குறிச்சி மின்தகன மேடையிலும், கா.மாமனந்துார் மயானத்தில் ஒருவரின் உடலும் எரியூட்டப்பட்டன.
ஏழு உடல்கள் கருணாபுரம் இடுகாட்டிலும், வீரசோழபுரம், மாடூர், பொற்படாக்குறிச்சி மயானங்கள், கள்ளக்குறிச்சி ஏ.எல்.சி., சர்ச் மற்றும் பள்ளி வாசல்களில் தலா ஒரு உடலும் அடக்கம் செய்யப்பட்டன.
தலைவர்கள் ஆறுதல்
அமைச்சர் உதயநிதி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா, மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன், சசிகலா மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பலியானோர் குடும்பத்தினரையும், சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனால், எல்லா பக்கமும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பதற்றம்நிலவியது. டி.ஜி.பி., சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி., அருண், வடக்கு மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமித்தல் மற்றும் 12 எஸ்.பி.,க்கள் தலைமையில், 2,000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சாராயம் விற்ற கண்ணுக்குட்டி(எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மெத்தனால் சப்ளை செய்த சேஷசமுத்திரத்தை சேர்ந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சாராய மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த பிரிவின் ஏ.டி.எஸ்.பி., கோமதி உடனடியாக கருணாபுரத்தில் விசாரணையை துவங்கினார்.
கருணாபுரத்தில் வயதான முதாட்டிகள் உட்பட பெண்கள் பலரும், 'இதுபோன்ற ஒரு நிகழ்வை தங்கள் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை. இதுபோன்று சம்பவம் இனி நடக்கக்கூடாது. சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' என, காவல் துறை அதிகாரிகளிடம் குமுறலை வெளிப்படுத்தினர். சில பெண்கள், 'பணம் கொடுத்தால் போன உயிர் திரும்பி விடுமா?' என்று போலீசாரிடம் கொந்தளித்தனர்.
நேற்று முன்தினம் காலையில் தன் குடும்பத்தில் இருவரை பறிகொடுத்த பெண்மணி மிகவும் ஆவேசமாக கலெக்டரை குற்றம் சாட்டினார். “என் குடும்பத்தினர் சாராயம் குடித்து இறந்ததை நானே வெளிப்படையாக சொல்ல காரணம், அதன் பிறகாவது யாரும் அந்த விஷத்தை வாங்கி குடிக்க மாட்டார்கள் என்பது தான். ஆனால், கலெக்டர் கொஞ்சமும் உண்மையை உணராமல், சாவுக்கு காரணம் சாராயம் அல்ல என்று பேட்டி அளித்தார். அந்த பேட்டி தான், மற்றவர்களை பயமில்லாமல் சாராயம் வாங்கி குடிக்க தூண்டுதலாக அமைந்தது. கலெக்டர் வாய் திறக்காமல் இருந்திருந்தால் ஏராளமான உயிர்கள் பலி போகாமல் தடுத்திருக்கலாம்” என அவர் கண்ணீர் பெருக பேசினார்.
கைதானவர்கள் ஆஜர்
கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜன், சகோதரர் தாமோதரன், கோவிந்தராஜன் மனைவி விஜயா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் இன்று (ஜூன் 21) ஆஜர்படுத்தினர். இவர்கள் மூன்று பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

