மறியல் செய்த விவசாயிகள்: குண்டுக்கட்டாக துாக்கிச்சென்ற போலீஸ்!
மறியல் செய்த விவசாயிகள்: குண்டுக்கட்டாக துாக்கிச்சென்ற போலீஸ்!
ADDED : பிப் 14, 2025 08:49 PM

காங்கேயம்: காங்கேயம் அருகே நாய்கள் கடித்ததில் பலியான ஆடுகளுக்கு இழப்பீடு கோரி மறியல் செய்த விவசாயிகளை, குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.காங்கேயம் தாலூக்கா பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திலும், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
காங்கேயம் சென்னிமலைரோடு திட்டுபாறை அருகே பாரவலசில், இறந்த ஆடுகள் அனைத்தையும் ரோட்டில் போட்டு காலை நேற்று காலை 11:00 மணி முதல் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் தாராபுரம் கோட்டாச்சியர் ஃபெலிக்ஸ்ராஜா, காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன், காங்கேயம் தாசில்தார் மேகனன், ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர் ஆனால் முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து விவசாயிகள் விடிய விடிய அதே இடத்தில் படுத்திருந்து போராட்டம் நடத்தினர்.இன்று மாலை திருப்பூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், எஸ்.பி., யாதவ்கிரீஸ்அசோக் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். வெறிநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; அதற்கான உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் கோரினர்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படததால், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 5.00 மணியளவில் போலீசார் லேசான தடியடி நடத்தியும், விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கி சென்றும் கைது செய்தனர். 100 பேர் காங்கேயம் அடுத்துள்ள பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவில் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் காங்கேயம் சென்னிமலை ரோட்டில் 30 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.