ADDED : ஜன 05, 2025 07:13 PM

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை அண்ணா பல்கலையில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவன், மொபைல் போனில் மற்றொருவனுடன் சார் எனக்கூறி பேசியதாக மாணவி போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனையடுத்து யார் அந்த சார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பத் துவங்கின.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று ஞானசேகரன் வீட்டில் சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அக்குழுவினர், ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தது.
இதனையடுத்து, சென்னை போலீசார் ஞானசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளான்.

