ஒரு மலர் கூட ஏற்றுமதி செய்யாத சர்வதேச ஏல மையம் லைசென்ஸ் பெறாத அரசு; இடைத்தரகர் பிடியில் விவசாயிகள்
ஒரு மலர் கூட ஏற்றுமதி செய்யாத சர்வதேச ஏல மையம் லைசென்ஸ் பெறாத அரசு; இடைத்தரகர் பிடியில் விவசாயிகள்
ADDED : ஜன 18, 2025 12:00 AM

தமிழக -- கர்நாடக மாநில எல்லையான ஓசூர், 'ரோஜா நகரம்' என, அழைக்கப்படுகிறது. இங்கு ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரைசாந்திமம் உள்ளிட்ட கொய்மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தவிர, திறந்தவெளியில் மலர் சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது.
ஆண்டுக்கு, 45,000 டன் மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை, பெங்களூரு ஏல மையத்திற்கு கொண்டு சென்று, விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
காதலர் தினம், புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் அதிகளவில் வெளிநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதியாகும். இதில், இடைத்தரகர்கள் தலையீடு அதிகமாக இருந்தது.
கோரிக்கை
இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, வெளிநாடுகளுக்கு மலர் ஏற்றுமதி செய்யும் வகையில், நெதர்லாந்து நாட்டில் இருப்பது போல, சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையோரம், 20.20 கோடி ரூபாய் மதிப்பில், 7.63 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச மலர் ஏல மையம் கட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலின், 2022 ஜன., 8ல் திறந்து வைத்தார்.
மையத்தில், 2,000 டன் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, ஏல மையம், தரம்பிரிப்பு கூடம், 16 கடைகள், கூட்ட அரங்கம், பயிற்சி அரங்கம் என மொத்தம், 67,000 சதுரடியில் கட்டுமான பணிகள் நடந்துள்ளன.
இந்த ஏல மையத்தால் விவசாயிகள் தங்கள் கொய்மலர்களை குளிர்பதன கிடங்குகளில் சேமிக்கலாம். மூன்றாண்டுகளை கடந்தும், சர்வதேச மலர் ஏல மையம் முழு வீச்சில் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால், விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்கள் லாபத்தை இழந்து தவிக்கின்றனர்.
மலர் ஏல மையம்
தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது:
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஓசூரில், 2,500 ஏக்கரில் உள்ள பசுமை குடில் கொய்மலர்கள், 25,000 ஏக்கரில் உள்ள திறந்த வெளி மலர்கள் பயன்பெறும் வகையில், சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட்டது.
இங்கு அதிகபட்சம், 15 அதிகாரிகள் வரை நியமிக்கப்பட்டிருந்தனர். இன்று, 3 பேர் மட்டுமே உள்ளனர். மூன்று ஆண்டுகளில், 16,000 லட்சம் மலர்கள் மட்டுமே, இந்த ஏல மையத்தில் விற்பனை செய்யப்பட்டுஉள்ளன.
இதுவரை ஒரு மலர் கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை. 16 லட்சம் மலர்கள் என்பது, 1 ஏக்கரில் மூன்று ஆண்டுகளில் பெறக்கூடிய மலர்களின் எண்ணிக்கை.
இப்படி மிக குறைந்த அளவில் மட்டுமே, ஏல மையத்தால் விற்பனை நடந்துள்ளது.
தி.மு.க., அரசு மலர் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு, 3 முதல், 4 லட்சம் சதுர மீட்டர் அளவிற்கு பசுமை குடில்களுக்கான மானியம் தேவை இருந்தும், 30,000 சதுர மீட்டருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
அரசு, மலர் ஏல மையத்தை நடத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் மலர்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் அடிமட்ட விலைக்கும், இடைத்தரகர்களிடமும் விற்க வேண்டிய நிலை உள்ளது.
சர்வதேச மலர் ஏல மையத்திற்கு ரோஜா, ஜெர்புரா, கிரைசாந்திமம் உள்ளிட்ட அனைத்து விதமான கொய்மலர்களை கொண்டு வந்தால் கூட, அவற்றை வாங்க போதிய வணிகர்கள் வருவதில்லை.
சர்வதேச ஏல மையம் எனக்கூறி விட்டு, ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தாமல், உள்ளூர் வணிகர்கள் ஒரு சிலர் மட்டுமே கொய்மலர்களை வாங்க வருகின்றனர்.
அவர்களும் முழுமையாக மலர்களை வாங்குவதில்லை. நேரடியாக விவசாய நிலத்திலேயே கொய்மலர்களை வணிகர்கள் வாங்கி விடுகின்றனர்.
நடவடிக்கை
ஏற்றுமதி வாய்ப்பு ஏற்படுத்தாமல், சர்வதேச ஏல மையத்திற்கு மலர்களை கொண்டு வருமாறு கூறினால், விவசாயிகள் எப்படி கொண்டு வருவர். தி.மு.க., அரசு விவசாயிகளின் மலர்களை ஏற்றுமதி செய்ய இன்னும், 'ஐ.இ.சி., கோடு' என்ற ஏற்றுமதி லைசென்சை கூட பெறவில்லை.
ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், புகையூட்டம் எனப்படும் ஒட்டுண்ணி மற்றும் தொற்றுயிரின கட்டுப்பாட்டு முறைகளை செய்ய வேண்டும்.
அதை கூட, ஏற்றுமதி மையத்தில் அரசு செய்யவில்லை. காதலர் தினத்திற்கு முன்பாக, முழு அளவில் மலர் ஏல மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -