ADDED : ஏப் 22, 2025 04:28 AM

திருப்பூர்: ''கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்'' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
பின், முகிலன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ''குவாரியிலிருந்து 1 கி.மீ., சுற்றளவுக்கு குடியிருப்புகள் இருக்கக்கூடாது; வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது; குவாரிகளை அளவீடு செய்யக்கூடாது'' என்கின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் ஐந்தாயிரம் கிராம மக்கள் அகதிகளாக வேண்டிவரும்.
குவாரி உரிமையாளர்களின் சட்ட விரோத கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கூடாது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 200வது வாக்குறுதியாக, 'அரியவகை கனிமங்களை அரசே ஏற்று நடத்தும்' என தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடையை போல், கல் குவாரிகளையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
எம்.சாண்ட், ஆற்று மணலுக்கு பதிலாக, மாதம் 15 லட்சம் டன் ஆற்று மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். கன மீட்டருக்கு பதிலாக, டன் அடிப்படையில் வரி விதிப்பதற்கு குவாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கனமீட்டரில் நிர்ணயிக்கும்போது, நடைச்சீட்டு கையால் எழுதி மோசடி நடக்கிறது. எடை அடிப்படையில், கம்ப்யூட்டர் பில் தயாரிக்கும்போது சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு இல்லை. தமிழக அரசு புதிய நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும். அனைத்து கல்குவாரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.