கோவை நுாலக புத்தகங்கள் கொள்முதல் விவகாரம் குறித்து...துவங்கியது விசாரணை! : நுாலகப் பிரிவினரிடம் பள்ளிக்கல்வித் துறை செயலர் 'கிடுக்கி'
கோவை நுாலக புத்தகங்கள் கொள்முதல் விவகாரம் குறித்து...துவங்கியது விசாரணை! : நுாலகப் பிரிவினரிடம் பள்ளிக்கல்வித் துறை செயலர் 'கிடுக்கி'
UPDATED : நவ 07, 2026 11:51 PM
ADDED : நவ 07, 2026 07:08 PM

சென்னை: கோவை ஈ.வெ.ரா., நுாலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த ஊழல் குறித்த விசாரணை தொடங்கி உள்ளது. பொது நுாலகத்துறை ஊழியர்களிடம், பள்ளிக்கல்வி துறை செயலர், நேற்று (நவ.,6) நடத்திய விசாரணையின் போது, புத்தகங்கள் கொள்முதல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கோவையில், 300 கோடி ரூபாய் செலவில், ஈ.வெ.ரா., பெயரில், பிரமாண்ட நுாலகம் கட்டப்பட்டுள்ளது. இதை கடந்த மாதம், 16ம் தேதி, முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இந்நுாலகத்திற்கு, தி.மு.க., ஆட்சியில், நுால்கள் கொள்முதல் செய்ததில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டினார்.
புத்தகங்கள் கொள்முதல் நடவடிக்கையை, தமிழக அரசின் பொது நுாலகத்துறை மேற்கொள்கிறது. இந்த துறை, பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. எனவே, பள்ளிக்கல்வி துறை செயலர் இன்னசென்ட் திவ்யா, நேற்று நுாலகத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, தலைமை செயலகத்திற்கு அழைத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தினார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ய, 35 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், எழுத்தாளர் பெருமாள் முருகனும் இருந்தார். அதனால், கொள்முதலுக்கு குழு தான் பொறுப்பு என, விசாரணையின் போது, நுாலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது யார்; அதை ஏற்றுக் கொண்டவர்கள் யார்; புத்தகங்கள் வாங்க, எப்போது விளம்பரம் செய்யப்பட்டது; மொத்தம் எத்தனை பதிப்பகங்கள் விண்ணப்பித்தன; மொத்தம் எத்தனை தமிழ் புத்தகங்கள் மற்றும் பிற மொழி புத்தகங்கள் வாங்க தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டன; பதிப்பகங்களை அழைத்து பேசியது யார்; எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டன என்ற விபரங்களை வழங்கும்படி, அவர்களிடம் பள்ளிக்கல்வி துறை செயலர் கேட்டுள்ளார்.
பெண் அலுவலர்
நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில், கடந்த ஆட்சியில் முதல்வரின் செயலராக இருந்த ஒரு அதிகாரியும், அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த அதிகாரியும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இருவரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். இவர்கள் கூறியபடி செயல்பட்டு, தலைமை நுாலகராக உள்ள பெண் அதிகாரி ஒருவர், நுாலகத் துறையை ஆட்டிப் படைத்துள்ளார். இவர் புத்தகங்கள் வாங்கும் குழுவிற்கு வழிகாட்டி உள்ளார். இவரிடம் விசாரித்தால், பல விபரங்கள் தெரியவரும் என, நுாலகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிக்கப்படவில்லை
கோவை ஈ.வெ.ரா., நுாலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில், ஊழல் நடந்துள்ளது போல, அனைத்து நுாலகங்களிலும் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான நுாலகங்களுக்கு வாங்கப்பட்ட நுால்கள் பிரிக்கப்படாமல் அட்டை பெட்டிகளில் அப்படியே உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தினால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் நுாலகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 'புத்தகங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்படும்' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் போலீஸ் விசாரணையும் தொடங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
