குன்றில் தீபம் ஏற்ற முடியவில்லை அரங்கில் தீபம் ஏற்றியது மகிழ்ச்சி சபா ஆண்டு விழாவில் நீதிபதி சுவாமிநாதன் 'பளீச்'
குன்றில் தீபம் ஏற்ற முடியவில்லை அரங்கில் தீபம் ஏற்றியது மகிழ்ச்சி சபா ஆண்டு விழாவில் நீதிபதி சுவாமிநாதன் 'பளீச்'
ADDED : டிச 06, 2025 02:01 AM

சென்னை: ''குன்றில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் சபா அரங்கில் தீபம் ஏற்றியது மகிழ்ச்சியாக உள்ளது,'' என, சென்னையில் நடந்த சபா ஆண்டு விழாவில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் பேசினார்.
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின், 80வது ஆண்டு விழா தி.நகர் வாணி மஹாலில் நேற்று நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விழா மலரை வெளியிட, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசுவாமி, முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் தலைவர் டெக்கான் மூர்த்தி மற்றும் துணை தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை எழுத்தாளர் சந்திரமோகன் தொகுத்து வழங்கினார்.
நீதிபதி சுவாமிநாதன் பேசியதாவது:
குன்றில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும், அரங்கில் தீபம் ஏற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. விழா என்றாலே கொண்டாட்டம். சில விழாக்களால் புனிதத்துவம் கிடைக்கும். அதனால், சஷ்டி பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விழாக்களை தவிர்ப்பதில்லை.
இன்று, இந்த சபாவின் சதாபிஷேகமாக தான் பார்க்கிறேன். தனி மனிதரிடம் எப்படி ஆசி பெறுவோமோ; அதை போல் இந்நிகழ்வில் பங்கேற்பது வாயிலாக மகிழ்ச்சியடைகிறேன்.
நமக்கும், பிற நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் கலாசாரம். அதுவே நம்மை யும், அடுத்த சமுதாயத்தில் இருந்தும் நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. இதை நாம் இழந்துவிட்டால், நம் அடையாளமே போய்விடும்.
இந்த அடையாளத்தை காப்பாற்றுவது நம் கோவில்கள் மற்றும் இது போன்ற சபாக்கள் தான். இந்த சபா தொடர்ந்து 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சபாவின் செயல்பாட்டால், தமிழ் சமுதாயத்திற்கு மேன்மை கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசுவாமி பேசியதாவது:
நீதி துறை மேல் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. சுவாமி தேசிகர், அனைவருக்கும் நீதி வழங்கும் பெரியவர் குறித்து பேசுகிறார். நீ காப்பாற்றினால், நான் காப்பாற்றப்படுவேன். நீ காக்கவில்லை என்றால் மற்றவர்களால் காப்பாற்ற முடியாது.
நமக்கு நீதி துறை தான் அந்த பெரியவர். நீதிபதி சுவாமிநாதன் போன்றவர்கள் தான், நீதி துறை மீது அந்த நம்பிக்கை வர காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன் மற்றும் 'மண்டோலின்' ராஜேஷ் இணைந்து வழங்கிய 'சிறப்பு ஜுகல்பந்தி' கச்சேரி நடந்தது.

