ADDED : ஜன 09, 2024 12:23 AM

தாம்பரம்: பந்தலுாரில், 16 நாட்களாக போக்கு காட்டி, வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தை, வண்டலுார் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு, விலங்கு புனர்வாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது.
மூன்று நாட்களுக்கு முன், அந்த சிறுத்தை தாக்கி, 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
நேற்று முன்தினம், அம்ந்ரோஸ் வளைவு என்ற இடத்தில் படுத்திருந்த சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். 16 நாட்களாக போக்கு காட்டி வந்த இந்த சிறுத்தை, வாகனம் மூலம் நேற்று, வண்டலுார் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு, அங்குள்ள விலங்குகள் புனர்வாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டது.
இங்கு சிறுத்தைக்குத் தேவையான சிகிச்சை அளித்து, இயல்பு நிலைக்கு திரும்பியவுடன், வண்டலுார் பூங்காவிலேயே விடுவதா அல்லது காட்டுப் பகுதியில் கொண்டுசென்று விடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என, பூங்காஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.