கருணாநிதி படித்த பள்ளியில் சட்டசபை உரையை தயார் செய்த மந்திரி
கருணாநிதி படித்த பள்ளியில் சட்டசபை உரையை தயார் செய்த மந்திரி
ADDED : ஏப் 19, 2025 07:50 PM
சென்னை:நாகை மாவட்டம், திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமர்ந்து, சட்டசபை உரையை தயார் செய்துள்ளார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ்.
சட்டசபையில் வரும் 24ம் தேதி, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையை, அமைச்சர் மகேஷ் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் நேற்று, நாகை மாவட்டம், திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு சென்ற அமைச்சர் மகேஷ், அங்குள்ள கருணாநிதி, அவரது பெற்றோர், முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில், 'கருணாநிதியையும் கல்வியையும் போற்றி, என் உரையை துவங்குவேன்' என எழுதினார்.
அதைத் தொடர்ந்து, அருகில் உள்ள கருணாநிதி படித்த பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் அமர்ந்து, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் ஆற்ற வேண்டிய உரையை தயார் செய்தார்.

