ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் துவக்கிய வேகத்தில் நிறுத்தம்
ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் துவக்கிய வேகத்தில் நிறுத்தம்
ADDED : ஜூலை 08, 2025 10:36 PM
சென்னை:பொதுமக்களுக்கு இலவசமாக பழச்செடி, காய்கறி, பருப்பு வகை விதைகள் வழங்கும் திட்டம், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வேகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், 'ஊட்டச்சத்து வேளாண் இயக்கம்' என்ற புதிய திட்டம் துவக்கப்படும் என, மார்ச் மாதம் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் அடங்கிய 15 லட்சம் காய்கறி விதை தொகுப்பு...
பப்பாளி, கொய்யா, எலுமிச்சை அடங்கிய 9 லட்சம் பழச்செடிகள் தொகுப்பு; புரதச்சத்து நிறைந்த மரதுவரை, காராமணி அடங்கிய ஒரு லட்சம் பருப்பு வகை தொகுப்பு, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் 4ம் தேதி துவக்கி வைத்து, ஐந்து பயனாளிகளுக்கு தொகுப்புகளை இலவசமாக வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, சென்னையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வைத்து, இலவச இடுபொருட்களை, தோட்டக்கலை துறையினர் வழங்கினர். சென்னையில் உள்ள தோட்டக்கலை பூங்காக்கள், டிப்போக்களில், பொதுமக்கள் வரிசையில் நின்று அவற்றை வாங்கிச் சென்றனர்.
முதல்நாள் எஞ்சிய செடிகள், விதைகளை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அடுத்தநாள், வழக்கம்போல திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நான்கு நாட்களாகியும், இலவச இடுபொருட்கள் வினியோகம் நடக்கவில்லை. முதல்வர் துவக்கி வைத்த திட்டம், துவங்கிய வேகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் நிறுவனங்களிடம் இருந்து மாதிரி விதைகள் வாங்கி, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அவற்றை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், விதைகள் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை.
இதனால், தற்காலிகமாக திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விதைகள் வந்ததும், மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்தவாரம் முதல் திட்டம் செயல்படுத்தப்படும். ஆதார் அட்டை நகல் மட்டும் கொடுத்து, இலவச இடுபொருட்களை பொதுமக்கள் வாங்கிச் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.