வட கிழக்கு பருவமழை 16ல் துவங்கும் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு புயல்கள் உருவாகலாம் என வானிலை மையம் தகவல்
வட கிழக்கு பருவமழை 16ல் துவங்கும் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு புயல்கள் உருவாகலாம் என வானிலை மையம் தகவல்
ADDED : அக் 11, 2025 01:09 AM
சென்னை:''தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வரும் 16 முதல் 18ம் தேதிக்குள் துவங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு 50 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தென்மேற்கு பருவமழை அக்., 16 முதல் 18ம் தேதி, இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதேசமயம், வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்று வீசி வருகிறது. இது, கிழக்கு - வடகிழக்கு திசை காற்றாக மாறும்போது, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை, அக்., 16 முதல் 18ம் தேதிக்குள் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 15 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தான் துவங்கி உள்ளது. இரண்டு ஆண்டுகளை தவிர, மற்ற ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகி உள்ளது.
நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் பதிவாகும். தென் மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பை விட குறைவாகவும் இருக்கும்.
வழக்கமாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் என, 92 நாட்களில் வடகிழக்கு பருவமழை 44 செ.மீ., பதிவாகும். நடப்பாண்டு, 50 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே, அதிகளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னங்கள் உருவாகி உள்ளன.
நடப்பாண்டும் புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. எத்தனை புயல் உருவாகும், எங்கே உருவாகும், தீபாவளி அன்று மழை இருக்குமா என இப்போது கணிக்க முடியாது. தாழ்வு மண்டலம், புயல் சின்னம் உருவாகும்போது, 20 செ.மீ., வரை மழை பொழிவு ஏற்பட அதிகளவு வாய்ப்புகள் உள்ளன.
அதற்கான முன்னேற்பாடுகளை, நாட்டின் குடி மக்களாக நாம் எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில், டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவு காணப்படும்; வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக ஒரு மணி நேரத்தில், 10 செ.மீ., மழை பொழிவு இருந்தால், அது மேக வெடிப்பாக கருதப்படும். அது, எங்கு வேண்டுமென்றாலும் பெய்யும். குறிப்பிட்ட இடங்களில் மழை பொழிவு இருக்கும் என, 100 சதவீதம் நம்மால் கணிக்க முடியாது. இது, சவாலானது. இயற்கையை இயற்கையாகத் தான் பார்க்க முடியும். வரும் 22ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் இதில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.