'ரேபிஸ்' நோய் பரப்பும் தெருநாய்களை ஒழிப்பதே ஒரே தீர்வு: கிருஷ்ணசாமி
'ரேபிஸ்' நோய் பரப்பும் தெருநாய்களை ஒழிப்பதே ஒரே தீர்வு: கிருஷ்ணசாமி
ADDED : செப் 06, 2025 02:12 AM
சென்னை:'ரேபிஸ் நோயை பரப்பும் தெருநாய்களை முற்றிலும் ஒழிப்பதே ஒரே தீர்வு' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தெருநாய்களுக்கு காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும்; தெருநாய்களால், 'பிளேக்' நோய் தடுக்கப்படுகிறது என சிலர் கூறுகின்றனர். இவை, சுற்றுப்புற சூழல் குறித்தோ, மக்களின் நல்வாழ்வு குறித்தோ, சிறிதும் அக்கறையற்றவர்களின் விதண்டாவாதங்கள். 'பல்லுயிர் ஓம்புதல்' என்பது நம் பண்பாடு. அதற்காக குழந்தைகள், பெண்கள், முதியோர், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தெருநாய்களை அதிகரிக்கச் செய்யும் எந்த செயலையும் ஏற்க முடியாது.
தெருநாய்களால், 'பிளேக்' தடுக்கப்படுகிறது என்பது தவறானது. பூனைகள் வாயிலாகவும், 'பிளேக் நோய்' பரவும் என்பதே உண்மை. தெருநாய்களுக்கு காப்பகங்களை ஏற்படுத்துவது, நடைமுறை சாத்தியமற்றது. எனவே, தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது முற்றாக ஒழிக்க வேண்டும்.
தெருநாய்கள், 'ரேபிஸ்' நோயை பரப்புகின்றன. வெறிநாய் கடிக்கு இன்றுவரை உரிய மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ரேபிஸ் பாதிக்கப்பட்டால், 100 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இக்கொடிய ரேபிஸ் நோயை பரப்பும் தெருநாய்களின் நடமாட்டத்தையும், பெருக்கத்தையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று, வீடுகளில் வளர்க்க வேண்டிய ஆடு, மாடுகள் பாதுகாப்பற்ற முறையில் சாலைகளில் திரிவதை தடுக்க வேண்டும். பன்றி, ஆடு, மாடுகளால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை தெருக்களில் விடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.