ஸ்டாலினுக்கு தெரிந்த ஒரே விஷயம் கடிதம் எழுதுவது மட்டும் தான்: அன்புமணி அன்புமணி கிண்டல்
ஸ்டாலினுக்கு தெரிந்த ஒரே விஷயம் கடிதம் எழுதுவது மட்டும் தான்: அன்புமணி அன்புமணி கிண்டல்
ADDED : அக் 26, 2025 01:12 AM

திருப்பூர்: ''ஆறுகளை சீரமைப்பதாக, அளித்த வாக்குறுதியை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டினார்.
தமிழகம் முழுதும், 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள, பா.ம.க., தலைவர் அன்புமணி, நேற்று திருப்பூர் சென்றார். அங்கு, நொய்யல் ஆற்றை பார்வையிட்டார்.
பின்னர், நொய்யல் ஆற்றை மீட்க வலியுறுத்தி, பா.ம.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
பின், அவர் கூறிய தாவது:
நொய்யல் ஆறு, அவல நிலையில் உள்ளது. தி.மு.க., அரசு, நீர் நிலைகளை நாசப்படுத்தி விட்டது. செங்கல் சூளை கழிவு, மனித கழிவு, ரசாயன கழிவு, திடக்கழிவு, தொழிற்சாலை கழிவு, சாய ஆலை கழிவு ஆகியவற்றால், நொய்யல் ஆறு பாழ்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத, ஒன்பது கோடி லிட்டர் சாய கழிவுநீர் அதில் கலக்கிறது.
கூவம், வைகை, தாமிரபரணி, நொய்யல் என, ஒவ்வொரு ஆற்றையும் நாசப்படுத்தி விட்டனர். ஆறுகளை மறுசீரமைப்போம் என தி.மு.க.,வினர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். அதை நிறைவேற்றவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்த ஒரே விஷயம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மட்டும் தான்.
டெல்டா மாவட்டங்களில், விளைந்த நெல்லை, கொள்முதல் செய்ய நிலையங்கள் இல்லை. சென்னையில், மழைக்காலத்தில், படகில் தான் செல்ல வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில், இரண்டு மடங்கு கடன் அதிகரித்துள்ளது. தமிழகம், 15 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆண்டுதோறும், வட்டி மட்டும் 70,000 கோடி ரூபாய் கட்டுகின்றனர். அந்த வட்டியையும், கடன் வாங்கி கட்டுகின்றனர்.
பொய்யை மட்டுமே சொல்லி, தி.மு.க., ஆட்சி செய்கிறது. திருப்பூர் அருகே, 450 கோடி ரூபாய்க்கு கனிமவள கொள்ளை நடந்துள்ளது.
தென் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கனிமவள கொள்ளை நடக்கிறது. இதை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். தமிழகத்தில், 15 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு, அடிமையாகி உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ம.க., செயல் தலைவராக, அன்புமணியின் சகோதரி காந்திமதி நியமிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “உட்கட்சி விவகாரம் குறித்து, கருத்து சொல்ல இப்போதைக்கு விருப்பமில்லை,'' என அன்புமணி பதிலளித்தார்.

