'அரசுக்கு எதிரான போராட்டமே தமிழகத்தை காக்க இனி ஒரே வழி!'
'அரசுக்கு எதிரான போராட்டமே தமிழகத்தை காக்க இனி ஒரே வழி!'
ADDED : டிச 26, 2024 08:04 PM
சென்னை:'முதல்வரின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சமுதாயத்தை சீரழிக்கும் குற்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக, ஆளும் தி.மு.க., திகழ்கிறது. இதற்கு அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த சம்பவமே, சான்றாக அமைந்துள்ளது. மாணவியை சீரழித்ததாக கைதான, சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன், தி.மு.க., உறுப்பினர் என்று செய்திகள் வருகின்றன. துணை முதல்வர் மற்றும் அமைச்சருடன் எடுத்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
தமிழகத்தின் மிக முக்கியமான பல்கலையில், 'சிசிடிவி கேமரா' செயல்பாட்டில் இல்லை என, தி.மு.க., அரசு சொல்வது, 'சர்க்கரையை எறும்பு தின்றது; சாக்கு பையை கரையான் தின்று விட்டது' என்பது போலிருக்கிறது. அந்த அளவுக்கு பாதுகாப்பு குறைபாட்டுடன், அண்ணா பல்கலையை, தி.மு.க., அரசு நடத்தி வருகிறதா?
பல வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன், பல்கலை வளாகத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டான். ஒரு 'ட்வீட்' போட்டு கருத்து சொல்வோரை, தேடி தேடி கைது செய்யும் காவல் துறை, பல வழக்கில் தொடர்புடையவரை கைது செய்யாதது ஏன்; தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதாலா?
போதைப் பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பாலியல், வன்கொடுமை என எல்லா கொடுஞ்செயலுக்கும் பின்னால், தி.மு.க., நிர்வாகிகள் இருப்பது, தி.மு.க., அரசுதான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என்ற சந்தேகத்தை, மக்கள் இடையே வலுவாக எழுப்பி உள்ளது.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில், உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து, மாநில காவல் துறை விசாரணை போதாது என, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டது. சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டீர்கள். ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக, அரசே உச்ச நீதிமன்றம் வரை சென்றால், பாலியல் குற்றம் செய்பவருக்கு, அரசின் மீது எப்படி அச்சம் வரும்?
இதுதான் உண்மை என்றால், உங்களிடம் சட்டம் - ஒழுங்கை காக்கக் கோரி வலியுறுத்துவதில், எந்தப் பயனும் இல்லை. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமையை எளிதில் கடந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால், அதை இப்போதே கைவிட்டு விடுங்கள். மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
முதல்வரின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி தி.மு.க., அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்றே, தமிழகத்தை காப்பதற்கான ஒரே வழி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

