ADDED : ஆக 28, 2025 01:25 AM
சென்னை: 'மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக் கிறார் முதல்வர் ஸ்டாலின் . அதில், ஒன்று தான் மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆண்டுக்கு நான்கு குழுக்களை அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதில், ஒன்று தான் சில மாதங்களுக்கு முன் அமைத்த, மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்த குழு.
இந்த குழுக்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என, தமிழக மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் வளர்ச்சி, வீக்கம் என, நகைச்சுவை செய்திருக்கிறார் ஸ்டாலின். வழக்கமாக, துண்டுச்சீட்டை கையில் கொடுப்போர், ஒரு மாற்றாக முகம் பார்க்கும் கண்ணாடியை, முதல்வர் கையில் கொடுத்து விட்டனர்.
அதனால் தான், அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால், வீக்கமாகுமே தவிர, அது வலிமையாகவோ, வளர்ச்சியாகவோ ஆகாது என, ஸ்டாலின் கூறுகிறார்.
அவரது குடும்பத்தில், அவர் முதல்வர். மகன் துணை முதல்வர். மருமகன் சூப்பர் முதல்வர். தங்கையும், மற்றொரு மருமகனும் எம்.பி.,க்கள். வீக்கத்தை பற்றி பேச, ஸ்டாலினை விட பொருத்தமானவர், வேறு யார் இருக்க முடியும்.
இந்த குடும்பத்தின் வீக்கத்தால் அவதிப்படுவது, அப்பாவி தமிழக மக்களே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.