உள்ளாட்சியில் ஓட்டுரிமை இல்லாத மலைவாழ் மக்களின் பரிதாப நிலை
உள்ளாட்சியில் ஓட்டுரிமை இல்லாத மலைவாழ் மக்களின் பரிதாப நிலை
UPDATED : ஜன 19, 2025 05:15 AM
ADDED : ஜன 19, 2025 12:27 AM

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை உள்ளது.
ஆனால், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. 2006 வன உரிமைச்சட்டப்படி, உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மூன்றாண்டுக்கு முன் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, திருமூர்த்திமலை, குருமலை, மேல்குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை ஆகிய மலைக்கிராமங்கள், தளி பேரூராட்சியில் இணைக்கப்பட்டு, இரு வார்டுகள் அமைக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், மற்ற மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை இல்லை. இது குறித்து, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
உடுமலை தாலுகாவில், 15 மலைக்கிராமங்களுக்கு சட்டசபை, லோக்சபா தேர்தலில் ஓட்டுரிமை உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். 2006 வன உரிமைச்சட்டப்படி, வன கிராமங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, வீட்டுமனை, விவசாய நில பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, கருமுட்டி, ஈசல்திட்டு, ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய, 10 வனக்கிராம மக்களுக்கு உள்ளாட்சியில் ஓட்டுரிமை இல்லை.
மலைப்பகுதியிலுள்ள கிராமங்களை இரண்டு ஊராட்சிகளாக பிரித்து, மலைவாழ் மக்களுக்கு ஓட்டுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை, தனி ஊராட்சியாக பிரிக்கும் வரை, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களுடன் இருக்கும் ஊராட்சிகளுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.