தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 சரிவு; ஒரு சவரன் ரூ.98,800க்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 சரிவு; ஒரு சவரன் ரூ.98,800க்கு விற்பனை
UPDATED : டிச 16, 2025 09:56 AM
ADDED : டிச 15, 2025 11:47 PM

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் விலை நேற்று, 1 லட்சம் ரூபாயை தாண்டி, 1 சவரன் 1,00,120 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று (டிச 16) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 சரிந்து ஒரு சவரன் ரூ.98,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து, தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிக வரி விதித்துள்ளார். இதனால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள், பணப் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் தினமும் உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 12,370 ரூபாய்க்கும், சவரன் 98,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 210 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து, 12,460 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து, 99,680 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலை நேற்று காலையில் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 213 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று மாலையில் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து, 12,515 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 1 லட்சம் ரூபாயை தாண்டி, 1,00,120 ரூபாய்க்கு சவரன் விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு, 1,160 ரூபாய் உயர்ந்தது. அதேபோல, வெள்ளியும் நேற்று மாலையில் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 215 ரூபாயானது. அதாவது, நேற்று மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வரலாறு காணாத விலை உயர்வு, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (டிச.,16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 சரிந்து ஒரு சவரன் ரூ.98,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,350க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.211க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்காவின் 'பெடரல்' வங்கி, வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்ததால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் முக்கிய காரணம். பல நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனவே, முன்கூட்டியே தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சர்வதேச சந்தையில், 31.1 கிராம் எடை உடைய அவுன்ஸ் தங்கம் விலை, 100 அமெரிக்க டாலர் அதாவது 9,000 ரூபாய் உயர்ந்து, 3.82 லட்சம் ரூபாயில் இருந்து, 3.91 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், நம் நாட்டிலும் தங்கம் விலை உச்சத்தை எட்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

