ADDED : ஆக 31, 2025 06:42 AM
சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஆபரண தங்கம், சவரன் விலை, 76,960 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,535 ரூபாய்க்கும், சவரன், 76,280 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாகும். வெள்ளி கிராம், 131 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து, 9,620 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 76,960 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரன் விலை, 77,000 ரூபாயை நெருங்கியுள்ளது.
வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 134 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் அதிகரித்து உள்ளது.
பொருளாதார விமர்சகர் நாகப்பன் கூறியதாவது:
அமெரிக்க நாட்டின் கரன்சி டாலர், அந்நாட்டின் வரி விதிப்பு, நிச்சயமற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால், இன்று பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் டாலரில், ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருகின்றன.
உலகளவில் தங்கம் கையிருப்பில், முதல் ஐந்து இடங்களில் இந்தியா உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. டாலரை கொடுத்து தான் தங்கம் வாங்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.