பாம்பன் பாலம் மார்ச்சில் திறப்பு: பிரதமர் பங்கேற்பதாக அறிவிப்பு
பாம்பன் பாலம் மார்ச்சில் திறப்பு: பிரதமர் பங்கேற்பதாக அறிவிப்பு
UPDATED : பிப் 15, 2025 06:16 AM
ADDED : பிப் 15, 2025 06:13 AM

ராமேஸ்வரம்,: ''ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு மார்ச்சில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று சிறப்பு ரயிலில் ஆர்.என்.சிங் வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைத்திருந்த மேடையில் நின்றபடி புதிய ரயில் பாலத்தை பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது:
புதிய பாலம் பணி முடிந்த நிலையில், மார்ச்சில் திறப்பு விழா நடக்க உள்ளது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சி ராமேஸ்வரத்தில் நடக்கும்.
புதிய ரயில் பாலத்தை கனரக கப்பல்கள், மீன்பிடி படகுகள் எளிதில் கடந்து செல்ல முடியும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணி ஏழு மாதங்களுக்குள் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், ராமேஸ்வரத்தில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்க உள்ள இடத்தையும், ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணி மற்றும் நடைமேடை சீரமைப்பு பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வரராவ், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா, அதிகாரிகள் இருந்தனர்.

