10 மாதம் அழுத்தம் தராத முதல்வர் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்தது ஏன்' அ.தி.மு.க.,தான் காரணம் என்கிறார் செல்லுார் ராஜூ
10 மாதம் அழுத்தம் தராத முதல்வர் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்தது ஏன்' அ.தி.மு.க.,தான் காரணம் என்கிறார் செல்லுார் ராஜூ
ADDED : ஜன 26, 2025 04:44 AM
மதுரை : மக்களும் அ.தி.மு.க.,வும் போராடியதை அடுத்த தான் முதல்வர் விழித்துக் கொண்டு டங்ஸ்டன் திட்டத்தை எதிர்ப்பதாக கூறினார் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: ஈ.வெ.ரா.வைச் இழிவாக பேசிய சீமானை கைது செய்திருக்க வேண்டும். முதல்வரும், துணை முதல்வரும் ஈ.வெ.ரா. நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது நாடகம் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
மேலுாரில் டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என பழனிசாமி போராடினார். அத்திட்டம் வரக்கூடாது என 10 மாதமாக முதல்வர், எம்.பி.,க்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. சட்டசபையில் 2 மணி நேரம் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசிய பழனிசாமிக்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. மக்களும் அ.தி.மு.க.,வும் போராடியதை அடுத்த தான் முதல்வர் விழித்துக் கொண்டு எதிர்க்கிறோம் என கூறினார்.
இனிவரும் ஒரு ஆண்டு முழுவதும் தி.மு.க.,வின் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மக்களை ஏமாற்றுவதற்காக தி.மு.க., பல்வேறு வேஷங்களை போடும். என்ன நாடகம் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. கூட்டணி கட்சிகள் மக்கள் எதிர்ப்பை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. நேற்று வரை தி.மு.க.,வை ஆதரித்த மா.கம்யூ., வி.சி.க., வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என பேசுகிறது.
வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க.,வினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. அதனை மூடி மறைக்கவே அதே ஊரைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.

