UPDATED : ஏப் 20, 2024 10:53 AM
ADDED : ஏப் 19, 2024 11:33 PM

சென்னை: லோக்சபா தேர்தல் தமிழகம் முழுதும் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. கடந்த 2019 தேர்தலில் பதிவான அதே 72 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இம்முறை 69.46 சதவீதம் பதிவாகின. பட்டியலில் பெயர்மாயமானதால், ஓட்டு போட முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். மாலை 7 மணி நிலவரப்படி 72 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்த நிலையில், நள்ளிரவில் அதனை குறைத்து, 69.46 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. மொத்தம் 6.23 கோடி வாக்காளர்களுக்காக, 68,321 சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 7:00 மணிக்கு முன்னதாக, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தினர். ஐம்பது ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இயந்திரங்கள் சரியாக வேலை செய்வதாக உறுதியானதும், 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. வெயிலுக்கு முன் ஓட்டளிக்க வேண்டும் என்று பல சாவடிகளில் 6:30 மணிக்கே வரிசையில் நின்றனர்.
சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுதடைந்ததாக புகார் எழுந்தது; அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. சலசலப்புகள், வாக்குவாதங்கள் தவிர்த்து அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது. பல்வேறு இடங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இரவு 7:00 மணிக்கு 72:09 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின் நள்ளிரவில் அதனை குறைத்து, 69.46 சதவீதம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 72.47 சதவீத ஓட்டுகளே பதிவாகி இருந்தன.

மாலை 6:00 மணி ஆனபோது, பல சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்றதால் அவர்களுக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டு, இரவு வரை ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். எனவே, அதன் பின் பதிவான ஓட்டுகளும், தபால் ஓட்டுகளும் சேரும்போது, ஓட்டுப்பதிவு சதவீதம் சற்று அதிகரிக்கும்.
தொகுதிவாரியாக ஒட்டுப்பதிவு சதவீதம்
தொகுதி - ஓட்டுப்பதிவு சதவீதம்
திருவள்ளூர் 68.31
வடசென்னை 60.13
தென்சென்னை 54.27
மத்திய சென்னை 53.91
ஸ்ரீபெரும்புதூர் 60.21
காஞ்சிபுரம் 71.55
அரக்கோணம் 74.08
வேலூர் 73.42
கிருஷ்ணகிரி 71.31
தர்மபுரி 81.48
திருவண்ணாமலை 73.88
ஆரணி 73.65
விழுப்புரம் 76.47
கள்ளக்குறிச்சி 79.25
சேலம் 78.13
நாமக்கல் 78.16
ஈரோடு 70.54
திருப்பூர் 70.58
நீலகிரி 70.93
கோவை 64.81
பொள்ளாச்சி 70.70
திண்டுக்கல் 70.99
கரூர் 78.61
திருச்சி 67.45
பெரம்பலூர் 77.37
கடலூர் 72.28
சிதம்பரம் 75.32
மயிலாடுதுறை 70.06
நாகப்பட்டினம் 71.55
தஞ்சாவூர் 68.18
சிவகங்கை 63.94
மதுரை 61.92
தேனி 69.87
விருதுநகர் 70.17
ராமநாதபுரம் 68.18
தூத்துக்குடி 59.96
தென்காசி 67.55
திருநெல்வேலி 64.10
கன்னியாகுமரி 65.46
புதுச்சேரி 78.80

