சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறுமா?
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறுமா?
UPDATED : மார் 17, 2025 09:42 AM
ADDED : மார் 16, 2025 11:43 PM

சென்னை: தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று துவங்குகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சி முன்னறிவிப்பு கொடுத்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தை எழுப்ப அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
டாஸ்மாக் சர்ச்சைகள் தமிழகத்துக்கு புதிதல்ல. மது விற்பனையில் நடக்கும் முறைகேடுகள் மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தெரிந்த ரகசியம். எனினும், மத்திய அரசின் அமலாக்கத்துறை இதில் ஆய்வுகள் நடத்தி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.
வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்த கதையாக, எதிர்க்கட்சிகளுக்கு இந்த அறிக்கை உதவும். இதுவரை அமைதி காத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு களை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று சொல்லி இருப்பது, அரசு இந்த பிரச்னையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம்.
சபாநாயகர் அப்பாவு மீது, அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு கிடையாது. சபாநாயகரின் பாரபட்சமான அல்லது நியாயமற்ற நடவடிக்கைகளை மக்களின் கவனத்துக்கு கொண்டுவர முடியும் என்பது மட்டுமே, எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய ஆறுதல் பரிசு. அதுவும், சபைக்குறிப்பு என்ற நிபந்தனைக்கு உட்பட்டது.
அப்பாவு மீதான தீர்மானம் இன்றே விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டு, உடனடியாக ஓட்டெடுப்பும் நடந்து தோற்கடிக்கப்படும் வாய்ப்பு அதிகம். பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து, 24ம் தேதி முதல், துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.
தொகுதி மறுவரையறை உட்பட சில பிரச்னைகளில், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே, ஒன்றரை மாதங்களுக்கு சட்டசபையில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.