ADDED : பிப் 09, 2025 01:01 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், நேற்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பான சி.ஐ.டி.யூ., மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலர் ராஜேந்திரன் கூறியதாவது:
மின்வாரியம், 1957ம் ஆண்டு உருவான காலத்தில் இருந்து, 1972, 1984, 1989, 1996, 2004, 2007ம் ஆண்டுகளில் மின்வாரியத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள், தி.மு.க., அரசால் நிரந்தரம் செய்யப்பட்டனர்.
ஆனால், 'தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை' என, மின்துறை அமைச்சர், ஜன., 24ல் ஒரு தகவலை கூறியது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புயல், மழை வெள்ள காலங்களில் மிகக்குறுகிய காலத்தில் சாய்ந்த மின்கம்பங்களை சீர் செய்து, அரசுக்கு பெருமை சேர்த்தது ஒப்பந்த தொழிலாளர்கள் தான்.
ஆனால், ஒப்பந்த தொழிலாளர் இல்லை; நிரந்தரம் என்பதற்கு வாய்ப்பு என, அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம்.
நான்கு ஆண்டுகளில், 15,000 தொழிலாளர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ளனர். நான்கு ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் மின்வாரியத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
'அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டு வர போகிறோம்' என்கின்றனர். மின்சாரம் தனியாருக்கு செல்வதற்கான முதற்படியாக தான் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்.
இதில், தனியார் நிறுவனம் மீட்டர்களை பொருத்தும்; கணக்கீடு செய்யும்; மின் துண்டிப்பு என, அனைத்து வேலைகளையும் செய்யும்.
இதனால், மின்வாரியத்தில் கணக்கீட்டாளர், மின் துண்டிப்பு உள்ளிட்ட ஊழியர்களுக்கான வேலை இழப்பு ஏற்படும்.
கேளராவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசே கையாளும் என தெரிவித்துள்ளது போல, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முதற்கட்டமாக வரும் 25ம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும், மார்ச் 25ல், மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பும் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்.
அடுத்த கட்டமாக, ஏப்ரல் இறுதியில் சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.