ADDED : ஜன 09, 2025 01:28 AM

கம்பம்: 'வள்ளக்கடவு சோதனை சாவடி கேரளாவிற்கு சொந்தமானதல்ல. முல்லைப்பெரியாறு அணையில் முகாமிட்டுள்ள கேரள நீர்வளத்துறையினர் வெளியேற வேண்டும் 'என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக பெரியாறு வைகை விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வேதா தாமோதரன் கூறினர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக பெரியாறு வைகை விவசாய சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அன்வர் பாலசிங்கம், வழக்கறிஞர் வேதா தாமோதரன் கூறியதாவது :
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அரசின் மைனர் இரிகேசன் துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும். இப்பிரிவினர் தமிழக அதிகாரிகளை செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.
வள்ளக்கடவு சோதனை சாவடி கேரளாவிற்கு சொந்தமானதல்ல. முல்லைப் பெரியாறு அணையில் தமிழன்னை படகு மீண்டும் இயக்கப்பட வேண்டும். அணையின் பாதுகாப்பு தற்போது கேரளாவிடம் உள்ளது.
அதை மீண்டும் தமிழகத்திற்கு மாற்ற வேண்டும். அணையின் பாதுகாப்பில் மாற்றம் செய்தால் மட்டுமே தமிழக அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக 8341 ஏக்கர் பகுதியில் கேரள அரசு எந்த வழக்கும் பதிவு செய்ய கூடாது. வள்ளக்கடவு சோதனை சாவடி வழியாக தமிழக அதிகாரிகள் தங்கு தடையின்றி அணைப்பகுதிக்கு சென்று வர வேண்டும். தமிழக அரசை நம்பி பயனில்லை. சிறு பராமரிப்பு பணிகளை கூட கேரள அதிகாரிகள் முன்னிலையில் செய்ய வேண்டியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை மீது ஹெலிகாப்டர் பறக்கிறது. தமிழக அதிகாரிகள் பொருத்திய சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்படுகிறது. பல வித நெருக்கடிகள் தரப்படுகிறது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதியில் 56 சதவீதம் தமிழர்கள் உள்ளனர். இந்த பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும்.
மேகதாது அணை பிரச்னையில் இதற்கு முன் தமிழக உரிமைகளுக்காக வாதாடப்பட்டுள்ளது. தற்போது முல்லைப்பெரியாறு பிரச்னையில் உரிமைகளை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றத்தில பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்படும் என்றனர்.

