'தி.மு.க.,வின் மரபணுவில் ஊறிப்போன திருட்டு, சுரண்டல்'
'தி.மு.க.,வின் மரபணுவில் ஊறிப்போன திருட்டு, சுரண்டல்'
ADDED : செப் 18, 2025 04:03 AM

சென்னை: 'திருட்டு மற்றும் சுரண்டல் என்பது, தி.மு.க.,வின் மரபணுவிலேயே ஊறிப்போயுள்ளது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில், கோவில் திருவிழாவுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட, 'கேட்டரிங்' உரிமையாளருக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக, தி.மு.க., நிர்வாகி ஒச்சி பாலு மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பணத்தை கேட்டால், ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அண்ணாமலை அறிக்கை:
திருட்டு மற்றும் சுரண்டல் என்பது, தி.மு.க.,வின் மரபணுவிலேயே ஊறிப்போயுள்ளது. சமூக நீதியை பற்றி, அக்கட்சியினர் திரும்ப திரும்ப பேசி வந்தாலும், வெறும் வாய் சொல்லாக தான் இருந்து வருகிறது. அரசியலிலோ அல்லது தன் கட்சி உறுப்பினர்களிடத்திலோ, சமூக நீதியை செயல்படுத்த தவறி விட்டது.
மதுரையில் தனக்கு வழங்கப்பட்ட பணியை முடித்தவர், தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டால், தி.மு.க., நிர்வாகியான ஒச்சி பாலு என்பவர், அவரை ஜாதியை சொல்லி திட்டியதுடன், பொது வெளியில் அவமானப் படுத்தி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் விதிவிலக்கல்ல. தி.மு.க.,வின் உண்மை தன்மையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.