ADDED : மார் 27, 2025 01:49 AM

2026 சட்டசபை தேர்தலுக்கு தமிழத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஜெயலலிதா மறைவிற்குபின் அ.தி.மு.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
2026 தேர்தல் அக்கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கேற்றாற்போல் மாவட்டம் தோறும் கள ஆய்வுக் கூட்டங்களை நடத்தி ஆலோசித்து வருகின்றனர். ஆனால் மற்ற கட்சிகளை காட்டிலும் அ.தி.மு.க.,வில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தே உள்ளது.
இதையடுத்து அமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் பொறுப்புகளுக்கு இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவில் பலன் கிடைக்கவில்லை .
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
இளம் தலைமுறையினர் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் ஈர்ப்பால் அவரை பின்பற்றுகின்றனர். இது போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க., தலைவர் விஜய் நோக்கி படையெடுக்கின்றனர்.40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அ.தி.மு.க.,வில் உள்ளனர்.
2026 தேர்தலில் வெற்றி இளைஞர்களையும், முதல் தலைமுறையினரையும் கவர்வது என்பது பெரிய பிரச்னையாக உள்ளது. என்ன முயற்சி எடுத்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. இதனால் அண்ணாமலை, சீமான், விஜய் உள்ள கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே ஓட்டுக்களை பெற முடியும் என்பதை தலைமைக்கு அறிவுறுத்தி வருகிறோம். இத்தேர்தல் வாக்குறுதிகளும் இளம் தலைமுறையினரை மையப்படுத்தியே அமையும் என்பதிலும் மாற்றம் இல்லை என்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -