ADDED : ஜன 05, 2024 11:22 PM
சென்னை:'பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அதனுடன், 1,000 ரூபாய் ரொக்கமாகவும் வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன பணியாளர், சர்க்கரை மற்றும் பொருளில்லா ரேஷன் அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்றவர்களுக்கு, 1,000 ரூபாய் கிடைக்கும்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கப்படும்.
வழக்கமாக 15ம் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் இம்மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10ம் தேதியே வழங்கப்படும். இது, 1.15 கோடி மகளிர் வங்கி கணக்குகளிலும் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
மொத்தம், 2.20 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. அரசு ஊழியர். வரி செலுத்துபவர் என சில பிரிவினர் தவிர்க்கப்பட்டுள்ளதால், கார்டுதாரர்களில் 20 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்காது என அதிகாரிகள் கூறினர்.
பொங்கல் பரிசு வழங்கும் பணியை, 10ம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார். கூட்ட நெரிசலை தவிர்க்க, ரேஷன் கடைக்கு எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்று குறிப்பிட்ட 'டோக்கன்' நாளை முதல் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு வினியோகம் முடியும் வரை ரேஷன் ஊழியர்கள் லீவு எடுக்கக்கூடாது என்று அரசு கூறியுள்ளது.
இதனிடையே, 'பொங்கல் பரிசாக தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார்.