'ஸ்டாக்' பட்டியல் இருக்கு; கடைகளில் யூரியா இல்லை
'ஸ்டாக்' பட்டியல் இருக்கு; கடைகளில் யூரியா இல்லை
ADDED : நவ 17, 2025 01:29 AM
சென்னை: உர தட்டுப்பாடு இல்லை என, வேளாண் துறையினர், 'ஸ்டாக்' பட்டியல் வெளியிடுகின்றனர். அதேநேரத்தில், கடைகளில் யூரியா கிடைப்பதில்லை என, விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
தமிழகத்தில், 26.2 லட்சம் ஏக்கரில் சம்பா பருவ நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சிறுதானியங்கள் சாகுபடியிலும் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெல் பயிர்களுக்கு யூரியா தேவைப்படுகிறது.
தமிழகத்திற்கு தேவையான உரங்களை, மாதவாரியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழகத்திற்கு கூடுதல் உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மத்திய உரத் துறைக்கு, மாநில வேளாண் துறை வாயிலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக, வேளாண் துறையினர் கூறி வருகின்றனர்.
கைவிரிப்பு ஆனால், கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், உரங்கள் ஸ்டாக் இல்லை. குறிப்பாக, யூரியா கேட்டு செல்லும் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால், சாகுபடி நேரத்தில் யூரியா கிடைக்காமல், விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களுக்கு இணையாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இம்மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி சமூக வலைதள பக்கம் உள்ளது. இதில், வேளாண் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.
தங்கள் பிரச்னைகள் குறித்து, விவசாயிகள் இதில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, விவசாயி ஒருவர், 'ஊத்துக்கோட்டை பகுதியில் யூரியா இல்லை. போதுமான அளவில் இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டார்.
அதற்கு பதிலளித்த வேளாண் இணை இயக்குநர், போதுமான அளவில் அங்கு இருப்பு இருப்பதாக பட்டியல் வெளியிட்டார். எந்தெந்த கடைகளில் எவ்வளவு இருப்பு உள்ளது என்ற விபரமும் அதிலிருந்தது. ஆனால், அந்த கடைக்கு சென்று கேட்டால், இருப்பு இல்லை என்று கைவிரித்தனர்.
தயக்கம் இதுகுறித்து அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டது. நேரில் ஆய்வு செய்வதாக, அதிகாரி உறுதி அளித்துள்ளார். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நடக்கிறது. உரங்கள் பயன்பாட்டை விவசாயிகள் குறைக்க ஆலோசனை வழங்குகின்றனர். உரங்களை பதுக்கும் கடைகள் மீது, நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

