ADDED : மார் 04, 2025 07:22 AM

மதுரை: “கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேடில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளன,” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி: என் மீது ஆதாரமில்லாத அவதுாறான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; 15 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இவ்வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வழக்கில் உடன்பாடு செய்ய வாய்ப்புமில்லை, தேவையுமில்லை. திருமணம் செய்யக்கூடாது என்பது ஈ.வெ.ரா., கோட்பாடு. 'என்ஜாய்மென்ட் வித் அவுட் ரெஸ்பான்சிபிலிட்டி' என அவர் கூறினார். ஆனால், எனக்கு எதிராக ஈ.வெ.ரா., பக்தர்கள் பேசுகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளன. மார்க்கிஸ்ட் கட்சி எந்த பொது பிரச்னைக்கு போராடி வருகிறது? தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அக்கட்சி குரல் கொடுக்கவில்லை. பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மாநில செயலர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி எனக் கூறுகிறார். மார்க்சிஸ்ட் கட்சி ஜீவானந்தத்துடன் செத்து விட்டது. சங்கரய்யாவுடன் முடிந்து போய் விட்டது.
பல தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட்ட நிலையில், தற்போது 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மார்க்சிஸ்ட் கட்சி குறுகி நிற்கிறது. அக்கட்சியின் புரட்சி, போராட்டங்களை எல்லாம் வறட்சியாக்கி விட்டது. நடிகை விஜயலட்சுமி விவாகரத்தை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றத்தை நாடி உள்ளேன். தமிழகத்தில் 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படி என்றால் தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகத்தானே அர்த்தம்? இவ்வாறு அவர் கூறினார்.