sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டு இயந்திரத்தில் தில்லு முல்லு: சான்சே இல்லை!

/

ஓட்டு இயந்திரத்தில் தில்லு முல்லு: சான்சே இல்லை!

ஓட்டு இயந்திரத்தில் தில்லு முல்லு: சான்சே இல்லை!

ஓட்டு இயந்திரத்தில் தில்லு முல்லு: சான்சே இல்லை!

42


UPDATED : ஏப் 18, 2024 10:48 PM

ADDED : ஏப் 18, 2024 10:44 PM

Google News

UPDATED : ஏப் 18, 2024 10:48 PM ADDED : ஏப் 18, 2024 10:44 PM

42


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எந்த கட்டத்திலும், யாராலும் எந்த தில்லுமுல்லுவும் செய்வதற்கு வாய்ப்பே இல்லை; முழுக்க முழுக்க அதை நம்பலாம்' என, உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய தேர்தல் திருவிழாவாகக் கருதப்படும், லோக்சபாவுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்க உள்ளது. நாடு முழுதும், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 102 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்க உள்ளது.

விசாரணை


இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளை உறுதி செய்வதற்காக, 'விவிபாட்' எனப்படும் ஓட்டு உறுதிச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

வாக்காளர்கள், தாங்கள் ஓட்டளித்த சின்னத்துக்குத் தான் ஓட்டுகள் பதிவாகி உள்ளதா என்பதை இதன் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.

தற்போது விவிபாட் இயந்திரத்தில், ஒரு தொகுதிக்கு தலா ஐந்து ஓட்டுச் சாவடிகளில் பதிவாகும் ஓட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன.

அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பதிவாகும் ஓட்டுகளையும் முழுமையாக எண்ண வேண்டும் என கோரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷன், 14 பக்க பதில் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது. எந்த கட்டத்திலும், அதில் யாராலும் தில்லுமுல்லு செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு துவங்கியதும், தேர்தல் அதிகாரி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 'ஸ்டார்ட்' என்ற பட்டனை அழுத்துவார்; அதன்பிறகே ஓட்டுப்பதிவு துவங்கும்.

அதுபோல, ஓட்டுப்பதிவு முடிந்ததும், 'க்ளோஸ்' எனப்படும் முடிவை குறிக்கும் பட்டனை அழுத்துவார்.

அதன்பிறகு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு செய்ய முடியாது. மேலும், ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிந்த நேரத்தை, தேர்தல் அதிகாரி பதிவு செய்வார்.

கட்டுப்பாட்டு சாதனம்


ஓட்டுப்பதிவு முடிவுக்கு வந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும், 'கன்ட்ரோல் யூனிட்' எனப்படும் கட்டுப்பாட்டு சாதனத்தை தேர்தல் அதிகாரி அணைத்து, தனித்தனியாக பிரித்து, அதற்கான பெட்டிகளில் வைப்பார்.

வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய ஏஜென்ட்கள் முன்னிலையில், இந்த பெட்டிக்கு 'சீல்' வைக்கப்படும். இது தொடர்பான ஆவணத்தில், 'பூத் ஏஜென்ட்' எனப்படும் வேட்பாளர் பிரதிநிதியின் கையெழுத்தும் பெறப்படும்.

அந்த ஓட்டுச் சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள் எவ்வளவு என்பதை, 17சி படிவத்தில் நிரப்பி, தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திடுவார். வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் கையெழுத்தும் பெறப்படும்.

இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்டத்திலும், யாராலும் எந்த தில்லுமுல்லுவும் செய்ய முடியாது.

ஓட்டு எண்ணிக்கையின்போது, அந்த குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியில் பதிவான ஓட்டுகள் குறித்த 17சி படிவம் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு சாதனம் சரிபார்க்கப்படும். இவை சரியாக இருந்தால் மட்டுமே, அதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.

இதில் வேறுபாடு இருந்தால், விவிபாட் எனப்படும்ஓட்டு உறுதிச்சீட்டு இயந்திரத்தில் உள்ள ஓட்டுகள் எண்ணப்படும். இந்த ஓட்டு எண்ணிக்கையின்போதும், வேட்பாளர்களின் ஏஜென்ட்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் இருப்பர்.

* உறுதிச்சீட்டு சரிபார்ப்பு


இதுவரை, 41,629 முறை ஓட்டு உறுதிச்சீட்டு சரிபார்ப்பு நடந்துள்ளது. இதில், நான்கு கோடிக்கும் மேற்பட்ட ஓட்டு உறுதிச் சீட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இதுவரை, இவற்றுக்கு இடையே வேறுபாடு இருந்ததில்லை. அதனால், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகள் முழு நம்பிக்கைக்கு உரியவை.

ஒரு ஓட்டுச் சாவடியில் பதிவாகும் ஓட்டு உறுதிச் சீட்டுகளை எண்ணுவதற்கு, ஒரு மணி நேரமாகும். சராசரியாக ஒரு ஓட்டுச் சாவடியில், 1,000 சீட்டுகள் பதிவாகும். இவை மிகவும் சிறியவை என்பதாலும், ஒட்டும் தன்மை உள்ளதாலும், எண்ணுவதற்கு நேரமாகும். மேலும், இதில் பல கட்ட நடவடிக்கைகள் உள்ளன. அதனால், வேகமாக செய்ய முடியாது.

சரிபார்க்கப்படும்


முதலில், விவிபாட் இயந்திரத்தின் சிறப்பு அடையாள குறியீட்டை உறுதி செய்ய வேண்டும். அதன்பின், அது திறக்கப்பட்டு, அதில் உள்ள சீட்டுகள் எடுத்து எண்ணப்படும். கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் பொருந்துகிறதா என்பது உறுதி செய்யப்படும்.

அதன்பின், வேட்பாளர் வாரியாக பிரிக்கப்படும். அவை, 25 சீட்டுகளாக தனியாக கட்டப்படும். அதன்பின், அவை எண்ணப்படும். பதிவாகாத ஓட்டுச் சீட்டுகளும் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்படும்.

இவை அனைத்தும் ஊழியர்களால், கைகளால் செய்யப்படுகிறது. ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள கட்சியினர் உள்ளிட்டோர், முடிவை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமுடன் இருப்பர். அதனால், அங்கு நிலவும் பதற்றமான, பரபரப்பான சூழ்நிலையில், ஒரு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டு உறுதிச் சீட்டுகளையும் எண்ணுவது என்பது, அதிக காலத்தை பிடிக்கும்.

சில நேரங்களில், விவிபாட் சீட்டுகளை மறுபடியும் எண்ண வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால், முடிவுகள் அறிவிப்பதில் அதிக காலம் பிடிக்கும். பதிவான ஓட்டுகள் மற்றும் எண்ணப்படும் ஓட்டுகள் இடையே எந்த நிலையிலும் தவறு ஏற்பட வாய்ப்பில்லை.

ஒருவர் தன் ஓட்டை பதிவு செய்யும்போது, ஓட்டு உறுதிச் சீட்டு, அதற்கான இயந்திரத்தில் விழுந்தால் மட்டுமே, ஓட்டு போடப்பட்டது உறுதி செய்யப்படும். இதற்காக, விவிபாட் இயந்திரத்தில் சென்சார் உள்ளது. அதனால், விவிபாட் இயந்திரம் மற்றும் கட்டுப்பாடு இயந்திரம் இடையே பதிவான ஓட்டுகள் தொடர்பாக எந்த தவறும் ஏற்பட வாயப்பு இல்லை.

கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில், வாக்காளர் எண்ணிக்கை, ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உட்பட அனைத்தும் அதிகரித்துள்ளது. 2019ல் 10.35 லட்சம் ஓட்டுச் சாவடிகள் இருந்தன; தற்போது, 10.48 லட்சமாக உயர்ந்துள்ளது.

வாக்காளர் உயர்வு




தகுதி வாய்ந்த வாக்காளர் எண்ணிக்கை, 61.4 கோடியில் இருந்து 97 கோடியாக உயர்ந்துள்ளது.ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது, ஓட்டு இயந்திரம், கட்டுப்பாடு சாதனம் மற்றும் விவிபாட் அடங்கியது. இவை, வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்னிலையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அதற்கான பெட்டியில் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்படும். அங்கிருந்து, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்படுகிறது.

அனைத்து கட்டங்களிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் உள்ளதால், எந்த கட்டத்திலும் இதில் தில்லுமுல்லு செய்ய முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்றைய விசாரணையின் போது, 'இது, தேர்தல் நடைமுறை. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் ஓட்டுப் பதிவு நடப்பதையும், தேர்தலின் புனித தன்மையையும் உறுதி செய்ய வேண்டும்.

சந்தேகம் வரக்கூடாது




தாங்கள் செலுத்தும் ஓட்டு குறித்து வாக்காளர்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படக் கூடாது. எனவே, விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் சீட்டை, வாக்காளர்களிடம் கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளதா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் சீட்டை வாக்காளர்களிடம் கொடுத்தால், வாக்காளர்களின் தனியுரிமை ரகசியம் பாதிக்கப்படும். மேலும், ஓட்டுச்சாவடிக்கு வெளியில் இருப்போர், இதை தவறாக பயன்படுத்தும் சூழல் ஏற்படும்' என்றார்.

இதையடுத்து, 'எல்லா விஷயங்களையுமே சந்தேகப்படக் கூடாது' என, மனுதாரர்களிடம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

கூடுதல் ஓட்டு விழுகிறதா?

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்பாடு தொடர்பான மாதிரி செயல்விளக்கம் நடந்தது. அப்போது, ஒரு ஓட்டு பதிவு செய்தால், இரண்டு ஓட்டுகள் விழுவதாக தகவல்கள் பரவின. அதுவும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் இவ்வாறு நடப்பதாக தகவல்கள் பரவின.இந்நிலையில், விவிபாட் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வில், இது குறித்து தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான, மத்திய தேர்தல் கமிஷனின் மூத்த துணை கமிஷனர் நிலேஷ் குமார் யாதவ் கூறியதாவது:இந்த விவகாரம் தொடர்பாக கலெக்டர் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரித்தோம். அது பொய் தகவல் என்பது தெரிய வந்துள்ளது. சிலர் வீணாக பொய் தகவல்களை பரப்பியுள்ளனர். அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us