நாளை உயிரோடு இருப்போமா என 'கியாரண்டி' இல்லை: பழனிசாமி அச்சம்
நாளை உயிரோடு இருப்போமா என 'கியாரண்டி' இல்லை: பழனிசாமி அச்சம்
ADDED : மார் 24, 2025 06:22 AM

ஓமலுார் : ''தி.மு.க., ஆட்சியில் இன்று நாம் உயிரோடு இருக்கிறோம்; நாளை இருப்போமா என தெரியாது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே, அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, வெறும் கண் துடைப்பு நாடகம். தி.மு.க., அரசுக்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே உள்ளன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புது திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், ஒப்பந்தம் போட்டு இறுதி செய்து பணி துவங்குவது இயலாத காரியம். இது, தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்.
தமிழகத்தில் நான்கு ஆண்டு ஆட்சியில் விண்ணை முட்டும் விலை உயர்வு, சொத்து, மின் கட்டணம், பத்திரப்பதிவு என அனைத்து வகையிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையெல்லாம் மறைக்கவே, மறுசீரமைப்பு பிரச்னையில் ஸ்டாலின் நாடகமாடுகிறார். தொகுதி மறுசீரமைப்பு என்பது பார்லிமென்டில் கேட்க வேண்டிய கேள்வி. இது குறித்து டில்லியில் தி.மு.க., - எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தியபோது, காங்., - எம்.பி.,க்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், தொகுதி சீரமைப்பு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களை சென்னைக்கு வரவழைத்து ஸ்டாலின் கூட்டம் நடத்தி, தன் ஆட்சி அவலங்களை மறைக்க முயன்றுள்ளார்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை நடக்கிறது. இது போன்ற கொலை நடக்கக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறோம். தற்போது நடக்கும் தொடர் கொலைகளை பார்த்தால், இன்றைக்கு உயிரோடு இருக்கும் நாம், நாளை உயிரோடு இருப்போமா என்பதற்கு கியாரண்டி இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் இயற்றப்பட்டது. அதை நிறைவேற்ற ஸ்டாலினுக்கு விருப்பம் கிடையாது. அதனால், அவர் ஏதேதோ பேசி, எல்லாரையும் குழப்புகிறார்.
ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தி.மு.க., 533 அறிவிப்புகளை வெளியிட்டதில், 15 மட்டுமே நிறைவேற்றி உள்ளது. அ.தி.மு.க., கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தியது தான், தி.மு.க., அரசின் சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.