ஓட்டையும் இல்லை; உடைசலும் இல்லை வைகைச்செல்வனுக்கு தி.மு.க., - வி.சி., பதிலடி
ஓட்டையும் இல்லை; உடைசலும் இல்லை வைகைச்செல்வனுக்கு தி.மு.க., - வி.சி., பதிலடி
ADDED : ஜூன் 19, 2025 01:24 AM

சென்னை: “தி.மு.க., கூட்டணியில் ஓட்டை விழவில்லை; வைகைச்செல்வனின் கண் பார்வையில் தான் ஓட்டை விழுந்துள்ளது,” என தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதியும்; “ஓட்டையும் இல்லை, உடைசலும் இல்லை,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் வன்னியரசும் கூறி உள்ளனர்.
சமீபத்தில், திருச்சியில் ஒரு ஹோட்டலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் 20 நிமிடங்கள் சந்தித்து பேசினர்.
வைகைச்செல்வன் தான் எழுதியுள்ள புத்தகத்தை, அப்போது திருமாவளவனிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, 'தி.மு.க., கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது' என, வைகைச்செல்வன் கூறியிருந்தார். அதற்கு, தி.மு.க., - வி.சி., கட்சிகள் பதிலடி கொடுத்துள்ளன.
அதன் விபரம்:
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி: தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை போல உறுதியாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது; விரிசலும் நிகழாது.
தி.மு.க., கூட்டணி ராணுவக் கட்டுப்பாட்டுடன் பலமாகவே இருக்கிறது. ஓட்டை விழுந்து விட்டது எனக்கூறும் வைகைச்செல்வனின் பார்வையில் தான் ஓட்டை விழுந்துள்ளது. அவர் நல்ல கண் டாக்டரை சந்தித்து, தன் பார்வை கோளாறை சரிசெய்ய வேண்டும்.
வி.சி., கட்சி துணை பொதுச்செயலர் வன்னியரசு: திருச்சி ஹோட்டலில், அருகருகே இருவரும் தங்கியிருந்தனர். தன்னிடம் உள்ள ஒரு புத்தகத்தை வழங்கி, இலக்கியம் குறித்து இருவரும் மரியாதை நிமித்தமாக பேசியுள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் ஓட்டை, உடைசல் எல்லாம் இல்லை. வைகைச்செல்வனை சந்தித்து பேசியதுபோல், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனையும் திருமாவளவன் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளார். சால்வை மரியாதையும் செய்யப்பட்டது. அப்படியானால், பா.ஜ., கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டதாக கருத முடியுமா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.

