பணம் வாங்கி கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியல் இல்லை
பணம் வாங்கி கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியல் இல்லை
ADDED : நவ 22, 2024 07:20 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில், இறந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் அளித்த பா.ஜ., மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் அளித்த பேட்டி:
இறந்த ஆசிரியை ரமணியின் தம்பிக்கு, தமிழக அரசு வேலை கொடுக்க வேண்டும். மத்திய அரசின் மீன்வளத் துறை வாயிலாக, அவருக்கு வேலை வழங்க முடியுமா என்பது குறித்து யோசித்து வருகிறோம். அதற்கான முயற்சியில் தமிழக பா.ஜ., இறங்கி உள்ளது.
தமிழகத்தில் சீர்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கை முதல்வர் சரிசெய்ய வேண்டும்; இல்லையென்றால், உள்துறைக்கென புதிதாக ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தோருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கும்போது, ஆசிரியை ரமணி மரணத்துக்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடு கொடுப்பது சரியல்ல.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. படுகொலைகளுக்கு போதைப் பொருட்களே காரணமாக உள்ளது. போலீசார் மீதும், சட்டத்தின் மீதும் அச்சம் இருந்தால் மட்டுமே, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியும்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்கள் 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை கேட்பதாகக் கூறியிருக்கிறார். அப்படியெல்லாம் பணம் பெற்று கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஒரு நாளும் பா.ஜ.,வுக்கு இருந்ததில்லை. அப்படி நடந்ததும் இல்லை. அவர், எந்தக் கட்சியை மனதில் வைத்து அப்படியெல்லாம் சொன்னார் என்பது தெரியாது. பா.ஜ., 15 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட பெரிய கட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.

