பாம்பன் துாக்கு பாலத்தில் பிரச்னை இல்லை ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி
பாம்பன் துாக்கு பாலத்தில் பிரச்னை இல்லை ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி
ADDED : ஆக 15, 2025 12:37 AM

ராமேஸ்வரம்:பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தில் சிறிய தொழில் நுட்பக் கோளாறு தான். விரைவில் சரியாகி விடும். என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தை ஆக.,12ல் திறந்து மூடிய போது தண்டவாளத்துடன் பொருந்தாமல் சிக்கல் ஏற்பட்டதால் 6:00 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, பொறியாளர்கள் துாக்கு பாலத்தில் ஆய்வு செய்தனர். இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தியும், துாக்கு பால இரும்பு டவருக்குள் சென் றும் பார்வையிட்டனர்.
பின் ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது :
துாக்கு பாலம் திறந்து மூடுவதில் சாப்ட்வேர் கோளாறு தான் ஏற்பட்டது. மற்றபடி பிரச்னை ஏதும் இல்லை. இனி வரும் நாட்களில் இதுபோன்ற பிரச்னை வராது என நம்புகிறேன்.
சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் போக்குவரத்து பரிசீலனையில் உள்ளது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பணி விரைவில் முடியும் என்றார்.