அடையவே முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
அடையவே முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ADDED : அக் 29, 2025 12:52 AM

கோவை: ''அடையவே முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை,'' என, துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் பேசினார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நேற்று கோவை வந்தார். அவருக்கு கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, சீமா, ஐ.ஐ.எப்.,உள்ளிட்ட தொழில் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
இதில், துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும், முதலில் தமிழகத்துக்குதான் வர நினைத்தோம். ஆனால், பிரதமர் மோடி, செஷல்ஸ் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கும் விழாவில் பங்கேற்கச் சென்று வருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த மண்ணில் இருந்துதான், என் பொது வாழ்க்கை பயணம் வெற்றிகரமாகத் தொடங்கியது. துணை ஜனாதிபதி பதவியை, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு, தமிழகத்துக்கு, கோவை மக்களுக்குக் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த பல பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. எனவே, தொழிலும், விவசாயமும் இணைந்து செயல்பட்டு, வளர வேண்டும்.
கயிறு வாரிய தலைவராக, பிரதமர் மோடி என்னை நியமித்ததற்கு நன்றி கூறியபோது, நன்றி வேண்டாம்; சாதித்துக்காட்டு என்றார். தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதியை 652 கோடி ரூபாயில் இருந்து மூன்றாண்டுகளில், 1,782 கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டினேன்.
நான் கேட்காமலேயே ஓராண்டுக்கு பதவியை நீட்டித்து வழங்கினார் மோடி. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணம்.
அடையவே முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை. தர்மமும், உண்மையும் நம்மிடம் இருக்கும்போது, அர்ப்பணிப்பு உணர்வோடு நம் அணுகுமுறை இருந்தால், எதுவும் சாத்தியமே.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.,சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
காரில் இருந்து இறங்கி, 1 கி.மீ., துாரம் நடந்து சென்றார். பொதுமக்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

