ADDED : டிச 12, 2024 02:36 AM
சென்னை:''நாடு முழுதும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு, மத்திய அரசின் பணம் செல்கிறது; எனவே, கலைஞர் கைவினை திட்டத்தை கைவிட்டு, விஸ்வகர்மா திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவரது பேட்டி:
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு, கலைஞர் கைவினை திட்டத்தை துவக்கியுள்ளது. இது, கைவினை கலைஞர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடிய திட்டம். நாடு முழுதும் விஸ்வகர்மா திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு, மத்திய அரசின் பணம் செல்கிறது.
தமிழகத்தில், 8.50 லட்சம் பேர் விண்ணப்பித்தும், மாநில அரசு விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாததால், பணம் கிடைக்கவில்லை.
எனவே, கலைஞர் கைவினை திட்டத்தை கைவிட்டு, விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக, மத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், ஹிந்து சமய அறநிலையத் துறை, தணிக்கைக்கு ஒத்துழைக்காமல் உள்ளது.
எனவே, அறநிலையத் துறை விவகாரத்தில், தமிழக அரசின் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, பா.ஜ., சார்பில் தொடர உள்ளோம்.
தொழில் அதிபர் அதானியை சந்திக்கவில்லை என, முதல்வர் கூறுகிறார். அதானியை சந்திப்பது குற்றம் இல்லை. அதானிக்கு, தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வழங்கப்படவில்லை என்று அரசு கூறுகிறது. இதை தான் குற்றச்சாட்டாக கூறுகிறோம்.
பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள், பா.ஜ., - அதானியை தொடர்புப்படுத்தி பேசுகின்றனர்.
தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை மக்களுக்கு தெரிவிக்கிறோம். முதல்வரின் மருமகன், அதானியை சந்தித்துள்ளார். முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள், அதானி நிறுவன அதிகாரிகளை சந்தித்துள்ளனர். முதல்வரின் மருமகன், அதானியை சந்திக்கவில்லை என்று கூறினால், எந்த தேதியில், எங்கு சந்தித்தனர் என்று தெரிவிக்கிறோம். முதல்வர் திசை திருப்பும் வேலையை விட வேண்டும்.
மதுரை மாவட்டம், டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக, நானும், மத்திய அமைச்சர் முருகனும், நாளை நிலக்கரித் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளோம். நல்ல முடிவுடன் வருகிறோம்.
இந்த விஷயத்தில் பிரச்னையை உருவாக்கியது தி.மு.க., தான்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜ., இருக்கிறது. தமிழக வளர்ச்சிக்கு, வளர்ச்சி திட்டங்கள் தேவை. அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும். மாநில அரசின் நிதி நிலைமை அதலபாதாளத்தில் உள்ளது. இதனால், தமிழக அரசு மருத்துவமனைகளின் நிலை மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

