பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., இருப்பு உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம்: ஐ.ஓ.சி., உறுதி
பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., இருப்பு உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம்: ஐ.ஓ.சி., உறுதி
ADDED : மே 09, 2025 10:13 PM
சென்னை,:'அனைத்து விற்பனை நிலையங்களிலும் போதிய அளவு பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது; எனவே, மக்கள் அச்சம் அடைய வேண்டாம்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையில், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக வதந்திகள் வெளியாகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள், எரிபொருள் வாங்க படையெடுப்பதால், பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இது தொடர்பாக, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுதும், இந்தியன் ஆயிலிடம், போதிய எரிபொருள் இருப்பு உள்ளது. எங்கள் வினியோக வழித்தடங்கள் அனைத்தும், சீராக இயங்குகின்றன.
எனவே, மக்கள் அவசரமாக பெட்ரோல், டீசல் வாங்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து விற்பனை நிலையங்களிலும், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உடனடியாக கிடைக்கிறது.
அமைதியாக இருந்து, தேவையற்ற அவசரத்தை தவிர்ப்பதன் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்க முடியும்.
மேலும், வினியோக வழித்தடங்களை தடையின்றி இயங்க வைப்பதுடன், அனைவருக்கும் தடையற்ற எரிபொருள் வழங்குவதை உறுதிசெய்ய முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.