தி.மு.க.,வின் மாஜி அமைச்சர் மகேஷ் சிறையிலிருந்து வெளிவர தற்போது வாய்ப்பில்லை!: ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தி.மு.க.,வின் மாஜி அமைச்சர் மகேஷ் சிறையிலிருந்து வெளிவர தற்போது வாய்ப்பில்லை!: ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
UPDATED : நவ 11, 2026 12:08 AM
ADDED : நவ 10, 2026 08:24 PM

சென்னை: தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் கைதாகியுள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சிறையில் இருந்து வெளியே வர தற்போது வாய்ப்பு இல்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க, போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'பள்ளி மாணவர்களின் கல்வி நலன் மற்றும் பொது நலனை விட, தனிப்பட்ட ஜாமின் மனு மேலானதல்ல' என்று கூறிய சிறப்பு நீதிமன்றம், அன்பில் மகேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளை தரம் உயர்த்துவது, கட்டட அனுமதி வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு, 170க்கும் மேற்பட்ட பள்ளிகளிடம், 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் செயலர் இளங்கோவன் அளித்த புகார் அடிப்படையில், தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், முத்துகுமாரின் கார் டிரைவர் சரவணன் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதால், மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அன்பில் மகேஷ், ஜாமின் கோரி கடந்த, 27ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன், கடந்த, 6ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், 'மகேஷிடம் நடத்திய மூன்று நாள் விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அதுகுறித்து முத்துகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் சரவணன் உள்ளிட்டோர் தலைமறைவாக இருப்பதால், மகேஷுக்கு ஜாமின் வழங்கக்கூடாது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, வழக்கை, 10ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.
அதன்படி, இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கு, பல கோடி ரூபாய் தொடர்புடைய தீவிரமான பொருளாதார குற்றமாகும்.
மோசடி குறித்து, பள்ளி நிர்வாகிகள், தாளாளர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவை, அன்பில் மகேஷை இவ்வழக்கின் குற்றத்துடன் தொடர்புபடுத்துவதற்கு போதுமான முதற்கட்ட ஆதாரங்களாக உள்ளன. மேலும், தனியார் பள்ளிகளை மிரட்டி வசூலிக்கப்பட்ட பணம், கட்சி நிதி என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் மகேஷிடம் வழங்கியதற்கான சாட்சிகளின் வாக்குமூலங்களும் கிடைத்து உள்ளன.
அதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டு மற்றும் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வழக்கை மிகப்பெரிய பொருளாதார குற்றத்துடன் வகைப்படுத்த முடிகிறது.
விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட, 'டிஜிட்டல்' சாதனங்கள் தடயவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டு உள்ளன; அவற்றின் முடிவுகள் வெளியாகவில்லை. சைபர் நிபுணர்களின் ஆய்வு முடிவுகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
மேலும், இவ்வழக்கில் கைதான முதல் குற்றவாளி அரசகுமார் மீது, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முத்துக்குமாரும் சரணடைந்துள்ளார். அவரிடமும் போலீஸ் தரப்பில் விசாரிக்க வேண்டியுள்ளது. இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.
இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மகேஷ் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி என்பதால், அவருக்கு ஜாமின் வழங்கினால், விசாரணையில் தாமதம் ஏற்படவும், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, இவ்வழக்கு விசாரணையின் ஆரம்பகட்ட நிலை, பள்ளி மாணவர்களின் கல்வி நலன் மற்றும் பொது நலனை விட, அன்பில் மகேஷின் தனிப்பட்ட ஜாமின் மனு மேலானது அல்ல. மேற்கண்ட காரணங்களுக்காக, ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
