ADDED : டிச 22, 2024 08:27 AM
சென்னை : 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக, சேலம் மாவட்டம் சந்தியூரில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு, ஊத்து, திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதுதவிர, திருவாரூர், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில், 3 முதல் 5 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, ஆந்திரா கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை 5:30 மணயளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அது தற்போது, சென்னைக்கு கிழக்கே, 480 கி.மீ., துாரத்திலும், ஒடிசாவின் கோபல்பூருக்கு தெற்கே, 590 கி.மீ., துாரத்திலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன்பின், கடலில் படிப்படியாக வலுவிழக்கும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல், 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகாலையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***