'என் போனை ஒட்டு கேட்கின்றனர்': நயினாருடன் சீமானும் திடீர் அலறல்
'என் போனை ஒட்டு கேட்கின்றனர்': நயினாருடன் சீமானும் திடீர் அலறல்
ADDED : ஏப் 21, 2025 06:15 AM

சென்னை: “என் அனைத்து செயல்பாடுகளையும் உளவு பார்க்கின்றனர்; போனையும் ஒட்டு கேட்கின்றனர்,” என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
மத்திய கூட்டணி அரசில் இருந்து விட்டு, தன்னாட்சி பேசலாமா? ஹிந்தியை திணித்தது காங்கிரஸ் அரசு. அதை எதிர்த்து போராடியது தமிழன். மீண்டும் அரசியல் பதவிக்காக, ஹிந்தியை திணித்தவர்களுடன் கூட்டணி அமைத்தனர். மாநில உரிமைகளை பறித்தது காங்கிரஸ். அப்போது காங்.,குடன் ஆட்சியில் இருந்தது, இன்று மாநில உரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க.,
நீட் தேர்வு, முல்லை பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை என அனைத்திற்கும் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றால், பார்லிமென்ட், சட்டசபை எதற்கு என முதலில் கேட்டது நான்தான். தற்போது அதை பா.ஜ.,வினர், வக்ப் சட்டத்திற்கு எடுத்துக் கொள்கின்றனர். ஆட்சியாளர்கள் எதுவாக இருந்தாலும், சட்டத்தின் பக்கம் தள்ளிவிடுவர்.
வக்ப் வாரியத்தில் ஹிந்துக்கள் இருக்கலாம் என்றால், ஹிந்து சமய அறநிலையத் துறையில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் நியமிக்கப்படுவரா என கேள்வி எழுப்பினேன். அதை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கூடாது என மறுக்கின்றனர். ஆனால், மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்கின்றனர். அப்படியென்றால், மத்தியில் ஒரு கொள்கை; மாநிலத்தில் ஒரு கொள்கையா?
அ.தி.மு.க., கூட்டணியில், த.வெ.க., தரப்பில் 90 சீட், துணை முதல்வர் பதவி கேட்டனர் என்பது உண்மைதான். ஆனால், துணை முதல்வர் பதவியை தர முடியாது என்று கூறியிருக்க மாட்டார்கள். ஏனெனில், இதெல்லாம் என்னிடமும் பேசப்பட்டதுதான். அங்கும் அதைத்தான் பேசி இருப்பர். பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் பிரிந்திருப்பர்.
ஏதேதோ நடக்குது; நல்லது நடந்தால் சரிதான். எங்கள் கோட்பாடு ஆட்சி மாற்றம், ஆள் மாறாட்டம் இல்லை; உண்மையான அரசியல் மாற்றம். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தன் மொபைல் போன் ஒட்டு கேட்கப்படுவதாக கூறியிருக்கிறார்.
இந்த கூத்தையெல்லாம் நயினார் நாகேந்திரன் இன்றைக்கு தான் பார்க்கிறார். என் மொபைல் போனை, 20 ஆண்டுகளாக ஒட்டு கேட்கின்றனர். இந்திய அளவில் ஒட்டு கேட்கப்படும், 50 தலைவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதில் பெருமைதான். என் அனைத்து செயல்பாடுகளையும் உளவு பார்க்கின்றனர்; போனையும் ஒட்டு கேட்கின்றனர்.
மொத்தத்தில் நாட்டில் தனிமனித சுதந்திரம் என்பது கிடையாது. எது ஒன்றையும் அரசு தரப்பில் பதிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

