இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவி பிரதமர் மோடிக்கு திருமா பாராட்டு
இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவி பிரதமர் மோடிக்கு திருமா பாராட்டு
ADDED : ஏப் 05, 2025 09:47 PM
அரியலுார்:- ''இலங்கை வாழ் தமிழர்களுக்கு, 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்,'' என, பிரதமர் மோடியின் அறிவிப்பை திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
அரியலுார் மாவட்டம், காட்டத்துாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
இன்றைய நாளில் பிரதமர் இலங்கையில் இருக்கிறார். அங்கிருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றத் தக்க வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவர்கள், சுதந்திரமாக கச்சத்தீவு வரையில் சென்று, மீன்பிடிப்பதற்குரிய உரிமைகளை பெற, இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
இலங்கை வாழ் தமிழர்கள் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு, 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என பிரதமர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது. மேலும், மத்திய அரசு ஏற்கனவே வீடுகள் கட்டும் பணிகளை, இலங்கையில் மேற்கொண்டு வருகிறது.
இருந்தபோதும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள், அவர்களின் சொந்த கிராமத்துக்கு செல்ல முடியவில்லை; காணிகளை மீட்க முடியவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள், தங்கள் கணவரை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
அவர்கள் சுதந்தரமாக அங்கு வாழ வேண்டும் என்றால், அங்கு காணிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள ராணுவத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். சிங்களர்களின் குடிபெயர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதற்குரிய நடவடிக்கைகளை, நம் பிரதமர் மேற்கொள்வதுதான் ஈழ தமிழர்களுக்கு செய்கிற முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும்.
இலங்கை அரசு, பிரதமர் மோடிக்கு விருது கொடுத்திருப்பது மகிழ்ச்சி. இந்தியா--இலங்கை இரு நாடுகளின் உறவை பேணுவதற்கு, விருது கொடுத்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

