மனு கொடுக்க வந்தவர்கள் காரில் கத்திகள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மனு கொடுக்க வந்தவர்கள் காரில் கத்திகள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : நவ 19, 2024 07:37 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் காரில் கத்திகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுக்க வந்தனர்.
முன்னதாக, அலுவலக நுழைவாயிலில், பொதுமக்கள் யாரேனும் மருந்து, மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவை எடுத்து வந்துள்ளனரா என போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 5 கத்திகள் இருந்தது தெரியவந்தது. போலீசார் காரில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர்.
அவர்கள், கடலுார் அடுத்த சங்கொலிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக கத்திகளை எடுத்துச் செல்வதாக கூறினர். சங்கொலிக்குப்பத்தில் புறவழிச்சாலை பணி காரணமாக பஸ்கள் நிற்காமல் செல்வதாகவும், பயணிகள் நிழற்குடை அமைத்து பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்கு கத்திகளுடன் வரக்கூடாது என, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

