காதல் திருமணம் செய்வோர் பா.ஜ., அலுவலகத்திற்கும் வரலாம்: அண்ணாமலை
காதல் திருமணம் செய்வோர் பா.ஜ., அலுவலகத்திற்கும் வரலாம்: அண்ணாமலை
ADDED : ஆக 26, 2025 03:59 AM
மதுரை: 'காதல் திருமணம் செய்வோர் பா.ஜ., அலுவலகத்திற்கும் வரலாம்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரையில் கிருஷ்ணம் மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி 30 வது விளையாட்டு விழாவில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் குரூப் ஏ முதல் டி வரையான அரசு அதிகாரிகள் கைதாகும்போது அந்தப் பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர். ஆனால் அதே அரசுப் பணியில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களுக்கு இது பொருந்தாது.
இன்று பொது ஊழியர் என்ற வகையில் எல்லோருக்கும் பொருந்தும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சராக இருப்போரும், 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் பணியில் இருந்து நீக்கப்படுவர்.
எமர்ஜென்சியின் போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்றோர் மீது எந்த வழக்கு தொடுத்தாலும் செல்லாது என தனது பதவியை காப்பாற்ற திருத்தம் கொண்டு வந்தார் இந்திரா. ஆனால் பிரதமர் மோடி நான் தவறு செய்தாலும் நீக்க வேண்டும் என இதை கொண்டு வந்துள்ளார். இதனை முதல்வர் ஸ்டாலின், மம்தாபானர்ஜி உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. எல்லோருக்கும் இது பொருந்தும் சட்டம் என்பதால், மக்கள் இதனை வரவேற் கின்றனர்.
திருநெல்வேலியில் நடந்த கூட்டம் அரங்கில் நடக்க வேண்டிய பூத்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம். பொதுக்கூட்டம் கிடையாது. இதனால் கூட்டம் இல்லை என்பது தவறு. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் காதல் திருமணம் செய்வோர் தங்கள் அலுவலகத்திற்கு வரலாம் என கூறியுள்ளார். பா.ஜ.,வும் ஆணவக் கொலை மீது கோபத்தில்தான் உள்ளது. பா.ஜ., அலுவலகத்திற்கும் எத்தனையோ பேர் நம்பி வருகின்றனர். அதுபோல யார் வேண்டுமானாலும் வரலாம்.
ஹிந்து சமுதாயத்தின் பிரச்னையே ஜாதிதான். நாம் எல்லோரும் சமம் என்று சொன்னாலும், சில இடங்களில் ஜாதி பிரச்னை உள்ளது. அதற்கு பள்ளி பாடத்திட்டங்களை சரிசெய்ய வேண்டும். தமிழக அரசு ஆணவப் படுகொலைகளுக்கு கடும் சட்டம் கொண்டு வரவேண்டும். ஜாதியை ஒழிக்க திராவிடம் வந்ததாகக் கூறுகின்றனர். 2025 லும் இப்பிரச்னை இருக்கிறதென்றால் அது தோற்றுவிட்டதாகத்தானே அர்த்தம்.
2026 ல் தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும்தான் போட்டி என விஜய் கூறுகிறார். இப்படி எல்லா கட்சிகளும் கூறுவது இயல்புதான். ஆனால் தே.ஜ., கூட்டணி இந்த தேர்தலில் ஆட்சிக்கு வரத்தயாராகி விட்டது என்று மக்களுக்குத் தெரியும்.
தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான் என்று பா.ஜ., தலைவர்கள் கூறினர். எனக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், ஒரு தொண்டனாக கட்சியின் கருத்தே எனக்கு வேதம். அ.தி.மு.க.,வினர் மாற்றான்தாய் கட்சியாக பார்க்காமல், பா.ஜ.,வின் வெற்றிக்கு பாடுபடுவர் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை நகர் பா.ஜ., தலைவர் மாரிசக்ரவர்த்தி, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் விஷ்ணுபிரசாத் உட்பட பலர் உடனிருந்தனர்.

