திருவண்ணாமலையில் மஹா தீபம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் மஹா தீபம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 14, 2024 12:14 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன், 40 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த 4ல் தீபத் திருவிழா கொடிஏற்றத்துடன் துவங்கியது.
நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில், 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது.
பின், 'ஏகன் அநேகன்' என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் நெய் தீப விளக்கு ஏற்றப்பட்டு, அதை வைத்து, ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பரணி தீபத்தை, கையில் ஏந்தியவாறு எடுத்து சென்று, அம்மன் சன்னிதி உள்ளிட்ட கோவிலில் உள்ள அனைத்து சன்னிதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது.
பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தனித்தனி தங்க விமானத்தில் மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் பிரகாரத்தில், தீப தரிசன மண்டபத்தில் தீபத்தை காணும் வகையில், மலையை நோக்கியவாறு
தொடர்ச்சி 13ம் பக்கம்
அமர்ந்தனர். பார்வதி அம்மனுக்கு சிவபெருமான் இடப்பாகம் அளித்ததை நினைவுகூரும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய் கோவிலினுள் இருந்து மலையை நோக்கி
தொடர்ச்சி 3ம் பக்கம்
திருவண்ணாமலையில்...
முதல் பக்கத் தொடர்ச்சி
பார்த்தபடி மாலை 5:59 மணிக்கு வெளி வர, காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டு அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது.
அதே நேரத்தில், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, பக்தி பரவச கோஷமிட்டு வழிபட்டனர். இந்த மஹா தீபம், 11 நாட்கள் எரியும்; 40 கி.மீ., வரை தெரியும். இதை தொடர்ந்து இரவு தங்க ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.