நாகேந்திரன் வீட்டுக்கு மிரட்டல்: போலீசார் மறுப்பு
நாகேந்திரன் வீட்டுக்கு மிரட்டல்: போலீசார் மறுப்பு
ADDED : நவ 16, 2025 12:45 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வீட்டை சிலர் நோட்டமிட்டதாக வந்த தகவலை போலீசார் மறுத்தனர்.
திருநெல்வேலி பெருமாள்புரத்தில் நாகேந்திரன் வீடு உள்ளது. கடந்த 12ம் தேதி இரவில், அவரது வீட்டை டூ-வீலரில் சென்ற இருவர் நோட்டமிட்டதாகவும், அவரது வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதை போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த 12ம் தேதி இரவு, டூ-வீலரில் சுற்றித் திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, டூ--வீலரில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் சிவகுமார், அவரது நண்பர் ஆகியோர் அங்கு சுற்றியது தெரிந்தது. செயின்ட் ஜோசப் தெருவில் ஒரு வீட்டுக்கு செல்ல முகவரி தெரியாததால், நீச்சல் குளம் தெரு வழியாக வந்துள்ளனர்.
பின்னர் நாகேந்திரன் வீடு இருக்கும் தெரு வழியாக சென்று, உணவு டெலிவரி கொடுத்துவிட்டு சென்று விட்டனர். ஆனால், 'சிசிடிவி' காட்சிகளை வைத்து மிரட்டல் நபர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு கூறினர்.

