ADDED : மார் 04, 2024 07:48 PM
திண்டுக்கல்;செயற்கை வர்ணம் பூசப்பட்ட உணவுகள்,புகையிலை விற்ற மூவருக்கு தலா 1 நாள் சிறை தண்டனை,அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் கோவில்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி சாமி65. இவர் 2023ல் பெருமாள் கோவில்பட்டியில் 100 கிலோ தடை புகையிலை பொருட்களை விற்பனை செய்ய பதுக்கினார். தகவலறிந்த திண்டுக்கல் உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் கலைவாணி,அலுவலர்
செல்வம் உள்ளிட்ட அதிகாரி்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் பால அய்யப்பன்60,என்பவர் மளிகை கடையில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட மசால் பூரியை பொது மக்களுக்கு விற்பனை செய்தார். தெற்கு ரதவீதியில் சத்தியமூர்த்தி65,என்பவர் தேங்காய் துருவல்களில் செயற்கை வர்ணம் பூசி விற்பனை செய்தார். இவர்கள் மூவர் மீதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சார்பில் குற்ற வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இவர்கள் விற்பனை
செய்த பொருட்களின் உணவு மாதிரிகளும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உறுதியானது. வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.2 நீதிமன்றத்தில்
நடந்தது.
நீதிபதி விடுமுறை என்பதால் நேற்று இவ்வழக்கை விசாரித்த ஜே.எம்.1 நீதிபதி பிரியா குற்றவாளிகள் திருப்பதி சாமிக்கு ரூ.40ஆயிரம் அபராதம்,பால அய்யப்பனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்,சத்திமூர்த்திக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தலா மூவருக்கும் 1
நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

