மூன்று புதிய இணை ஆணையரகம் அறநிலையத்துறையில் உருவாக்கம்
மூன்று புதிய இணை ஆணையரகம் அறநிலையத்துறையில் உருவாக்கம்
ADDED : செப் 04, 2025 01:40 AM
சென்னை:ஹிந்து சமய அறநிலையத்துறையில், புதிதாக மூன்று இணை ஆணையரகம், ஒரு உதவி ஆணையரகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம், மாநில அளவில் 20 மண்டலங்களாகவும், 36 கோட்டங்களாகவும் செயல்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இணை ஆணையர், ஒவ்வொரு கோட்டத்திற்கும், ஒரு உதவி ஆணையர் நியமிக்கப்பட்டு, நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், புதிதாக மூன்று இணை ஆணையரகம், ஒரு உதவி ஆணையரகம் ஏற்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஹிந்து சமய அறநிலையத்துறையில், சென்னை மாவட்டத்திற்கு, ஏற்கனவே இரண்டு மண்டல இணை ஆணையரகம் உள்ள நிலையில், மூன்றாவது ஒரு இணை ஆணையரகம், திருவள்ளூர், தர்மபுரி மாவட்டங்களுக்கு, தலா ஒரு இணை ஆணையரகம்; திருப்பத்துார் மாவட்டத்திற்கு, புதிதாக ஒரு உதவி ஆணையர் அலுவலகம் ஏற்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, இணை ஆணையர் அலுவலகங்களுக்கு, பொறுப்பு அதிகாரிகள் நியமித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.