சிறை காவலர்கள் மூவர் ராஜினாமா அதிகாரிகள் நெருக்கடி காரணமா?
சிறை காவலர்கள் மூவர் ராஜினாமா அதிகாரிகள் நெருக்கடி காரணமா?
ADDED : நவ 16, 2025 01:40 AM
சென்னை: சிறைத்துறையில் பணிபுரியும் இரண்டு காவலர்கள் உட்பட மூன்று பேர் ராஜினாமா கடிதமும், ஒருவர் விருப்ப ஓய்வு மனுவும் அளித்துள்ளது, அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, வாரம் ஒருமுறை, 115 கிராம் சமைத்த கோழிக்கறி வழங்கப்படுகிறது . இதற்கு ஆண்டுக்கு , 10 கோடி ரூபாய் வரை செலவானது. இதை தவிர்க்க, சென்னை புழல் உட்பட ஒன்பது சிறைகளில் , கோழிப்பண்ணைகள் நடத்தப்படுகின்றன.
இதில் வளர்க்கப்படும், 40 சதவீத கோழிகள் கைதிகளுக்கு வழங்கப்படுவதுடன், மீதமுள்ள, 60 சதவீத கோழிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது, சிறை பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை, அசைவ ஹோட்டல்களில் விற்க, 'ஆர்டர்' எடுத்து வருமாறு, சிறை காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது, காவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சிறைக் காவலர்கள் கூறியதாவது:
கோழிக்கறி விற்கவா நாங்கள் காவலர் பணியில் சேர்ந்தோம்.
எங்களால் இதுபோன்ற வேலையை செய்ய முடியாது என, கடலுாரில் முதல்நிலை காவலர் ஒருவர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
மேலும், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, சேலம் உதவி சிறை அலுவலர், சென்னை புழல் முதல்நிலை காவலர் ஒருவர், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். பூந்தமல்லி துணை சிறை அலுவலர் ஒருவர், விருப்ப ஓய்வில் செல்ல மனு கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

